Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டிப்ஸ் 4 உடல்நலத்தைக் காத்துக்கொள்ளுங்கள்

டிப்ஸ் 4 உடல்நலத்தைக் காத்துக்கொள்ளுங்கள்

“விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்.” (நீதிமொழிகள் 22:3) எளிய பாதுகாப்பான முயற்சிகள் எடுத்தால் நோய்களையும் அதனால் வருகிற வேதனையையும் தவிர்க்கலாம்; அதுமட்டுமல்ல, நேரத்தையும் பணத்தையும்கூட மிச்சப்படுத்தலாம்.

எப்போதும் சுத்தமாக இருங்கள். “தொற்று நோய் தாக்காமல், ஆரோக்கியமாக, நலமாக வாழ ஆசைப்படுகிறீர்களா? அதற்கு ஒரே நிவாரணம், கைகளைக் கழுவுவது” என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் நோய்த் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் அறிக்கை செய்திருக்கின்றன. கிட்டத்தட்ட 80 சதவீத தொற்று நோய் வருவதற்குக் காரணம் கைகளைக் கழுவாததுதான். எனவே, அடிக்கடி கைகளைக் கழுவுங்கள். சாப்பிடுவதற்கு முன்பு, சமைப்பதற்கு முன்பு, அல்லது காயம்பட்ட இடத்தைச் சுத்தப்படுத்திய பின்பு, கழிவறையை உபயோகித்தப் பின்பு, குழந்தையின் ஈரத் துணிகளை மாற்றிய பின்பு கை கழுவுங்கள்.

கிருமிநாசினி திரவத்தைக் கைகளில் தேய்த்துக்கொள்வதற்குப் பதிலாக, சோப்புப் போட்டு கை கழுவுவது நல்லது. ‘கையை வாயில் வைக்காதே, கண்ணில் வைக்காதே’ என்றெல்லாம் பிள்ளைகளுக்குப் பெற்றோர் சொல்லிக்கொடுப்பதோடு, கைகளை நன்றாகக் கழுவுவதற்குக் கற்றுக்கொடுத்தால், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். தினமும் குளிப்பது, உடை, படுக்கை விரிப்புகள் போன்றவற்றைச் சுத்தமாக வைத்திருப்பது நல்ல ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

தொற்றுநோய்களை அண்டவிடாதீர்கள். ஜலதோஷம், காய்ச்சல் உள்ளவர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இருங்கள், சாப்பாட்டுப் பாத்திரங்களைப் பகிர்ந்துகொள்ளாதீர்கள். அவர்களுடைய எச்சில், சளி மூலம் அது உங்களையும் தொற்றிவிடலாம். இரத்தத்தின் மூலமாகப் பரவுகிற ஹெப்படைடிஸ் ‘பி’, ‘சி’, மற்றும் ஹெச்ஐவி/எய்ட்ஸ் போன்ற நோய்கள் உடலுறவுகொள்வதால், போதை ஊசி போட்டுக்கொள்வதால், இரத்தம் ஏற்றிக்கொள்வதால் முக்கியமாகத் தொற்றுகின்றன. தடுப்பு ஊசி போட்டுக்கொண்டால் சில தொற்றுநோய்கள் அண்டாமல் காக்க முடியும்; என்றாலும், தொற்றுநோய் உள்ளவரோடு பழகும்போது முன்ஜாக்கிரதையாக இருப்பதுதான் புத்திசாலித்தனம். பூச்சிக்கடிக்கு ஆளாகாதீர்கள். கொசுக்களோ நோய் பரப்புகிற பூச்சிகளோ மொய்த்துக்கொண்டிருக்கிற நேரத்தில் வெளியே உட்காராதீர்கள், தூங்காதீர்கள். குறிப்பாக, குழந்தைகளின் படுக்கையைச் சுற்றி கொசுவலை கட்டுங்கள்; பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்துங்கள். *

வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டை உள்ளேயும், வெளியேயும் சுத்தமாக வைப்பதற்கு எல்லா முயற்சியும் எடுங்கள். தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனென்றால், அங்கேதான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. குப்பைக் கூளங்கள், மூடி வைக்கப்படாத உணவுப் பொருள்கள், போன்றவற்றைப் பார்த்தால் ஈ, பூச்சி, எலி ஆகியவை அழையா விருந்தாளிகளாக நம் வீட்டுக்குள் வந்துவிடும். அவற்றுடன் இலவச இணைப்பாக வருகிற நுண்ணுயிரிகளோ நமக்கு நோய்களைப் ‘பரிசளிக்கும்.’ உங்கள் வீட்டில் கழிவறை இல்லாவிட்டால், ஒதுக்குப்புறமான இடத்திற்குப் போவதற்குப் பதிலாக ஒரு கழிவறையைக் கட்டிக்கொள்ளுங்கள். அதை மூடிவையுங்கள். அப்போதுதான் கண் நோய்களையும் மற்ற நோய்களையும் பரப்புகிற ஈக்கள் அங்கே மொய்க்காமல் இருக்கும்.

உங்களைக் காயப்படுத்திக்கொள்ளாதீர்கள். வேலை செய்யும்போதும், வண்டி ஓட்டும்போதும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் வண்டி நல்ல நிலையில் இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ளுங்கள். பாதுகாப்பு கண்ணாடி, தலைக்கவசம், ‘ஷூ’, ‘சீட்-பெல்ட்’, காதைப் பாதுகாக்கிற கருவிகள் போன்றவற்றை அணிந்துகொள்ளுங்கள்; அதோடு, பொருத்தமான உடையை உடுத்திக்கொள்ளுங்கள். வெயிலில் அதிகமாக அலையாதீர்கள்; அதனால், புற்றுநோய் வரலாம், தோல் சுருங்கி வயதான தோற்றம் ஏற்படலாம். புகை பிடிக்கிற பழக்கம் இருந்தால், நிறுத்திவிடுங்கள். இப்போதே நீங்கள் நிறுத்தினால், இதய நோய், நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பு குறையும். * (g11-E 03)

^ ஜூலை 8, 2003 விழித்தெழு!-வில் வெளிவந்த “பூச்சிகள் நோய்களை பரப்புகையில்” என்ற அட்டைப்பட தொடர் கட்டுரைகளைப் பாருங்கள்.

^ புகை பிடிப்பதை நிறுத்துவது சம்பந்தமாக அக்டோபர்-டிசம்பர் 2010 விழித்தெழு!-வில் பக்கங்கள் 28-32-ல் வெளிவந்துள்ள கட்டுரைகளைப் பாருங்கள்.