Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 07

யெகோவா எப்படிப்பட்டவர்?

யெகோவா எப்படிப்பட்டவர்?

யெகோவாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் நம் அறிவுக்கு எட்டாதவர் என்றும், மனிதர்களால் அவரிடம் நெருங்கவே முடியாது என்றும் நினைக்கிறீர்களா? அல்லது, அவர் உணர்ச்சிகள் இல்லாத வெறும் சக்தி என்று நினைக்கிறீர்களா? யெகோவா உண்மையிலேயே எப்படிப்பட்டவர்? அவருடைய குணங்களைப் பற்றி அவரே பைபிளில் சொல்லியிருக்கிறார். உங்கள்மேல் எவ்வளவு அக்கறையாக இருக்கிறார் என்றும் சொல்லியிருக்கிறார்.

1. கடவுளை நம்மால் ஏன் பார்க்க முடிவதில்லை?

“கடவுள் பார்க்க முடியாத உருவத்தில் இருக்கிறார்.” (யோவான் 4:24) நமக்கு இருப்பது போன்ற உடல் யெகோவாவுக்குக் கிடையாது. அதனால், அவரை நம்மால் பார்க்க முடியாது. அவர் இருக்கிற இடத்தையும், அதாவது பரலோகத்தையும், நம்மால் பார்க்க முடியாது.

2. யெகோவாவுக்கு என்னென்ன குணங்கள் இருக்கின்றன?

யெகோவாவைப் பார்க்க முடியாது என்றாலும், அவர் உண்மையிலேயே இருக்கிறார். அவருடைய அழகான குணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது அவர்மேல் நமக்கு அன்பு வரும். “யெகோவா நியாயத்தை நேசிக்கிறார். அவருக்கு உண்மையாக இருப்பவர்களைக் கைவிட மாட்டார்.” (சங்கீதம் 37:28) அவர் “கனிவான பாசமும் இரக்கமும் நிறைந்தவர்.” (யாக்கோபு 5:11) முக்கியமாக, “உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார். சோர்ந்துபோனவர்களை அவர் காப்பாற்றுகிறார்.” (சங்கீதம் 34:18, அடிக்குறிப்பு) அதோடு, நம் செயல்கள் அவருடைய மனதைப் பாதிக்கும். நாம் கெட்டது செய்யும்போது அவர் வேதனைப்படுகிறார். (சங்கீதம் 78:40, 41) நல்லது செய்யும்போது சந்தோஷப்படுகிறார்.​—நீதிமொழிகள் 27:11-ஐ வாசியுங்கள்.

3. நம்மேல் அன்பு இருப்பதை யெகோவா எப்படிக் காட்டுகிறார்?

யெகோவாவின் குணங்களிலேயே சிறந்த குணம் அன்புதான். சொல்லப்போனால், “கடவுள் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:8) நம்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை யெகோவா பைபிளில் சொல்லியிருக்கிறார், தன் படைப்புகள் மூலமாகவும் காட்டியிருக்கிறார். (அப்போஸ்தலர் 14:17-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, அவர் நம்மை எப்படிப் படைத்திருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். நம்மால் விதவிதமான நிறங்களைப் பார்க்கவும், இசையைக் கேட்டு ரசிக்கவும், உணவை ருசிக்கவும் முடியும். நாம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காகவே இந்த எல்லா திறனையும் அவர் கொடுத்திருக்கிறார்.

ஆராய்ந்து பார்க்கலாம்!

ஆச்சரியமான விஷயங்களைச் செய்வதற்கு யெகோவா எதைப் பயன்படுத்துகிறார் என்று இப்போது பார்க்கலாம். அவருடைய அருமையான குணங்களை எப்படிக் காட்டியிருக்கிறார் என்றும் பார்க்கலாம்.

4. கடவுளுடைய சக்தி

வேலைகள் செய்வதற்கு நாம் நம் கையைப் பயன்படுத்துவதுபோல், எல்லாவற்றையும் செய்வதற்கு யெகோவா தன்னுடைய சக்தியைப் பயன்படுத்துகிறார். கடவுளுடைய சக்தி பொதுவாக “பரிசுத்த ஆவி” என்று சொல்லப்படுகிறது. அது ஒரு கடவுள் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், லூக்கா 11:13-ஐயும் அப்போஸ்தலர் 2:17-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • கடவுளுடைய சக்திக்காக வேண்டும்போது கடவுள் அதை ‘பொழிவார்.’ அப்படியென்றால், அது ஒரு நபராக அல்லது கடவுளாக இருக்க முடியுமா? ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

யெகோவா தன்னுடைய சக்தியை வைத்து ஆச்சரியமான விஷயங்களைச் செய்திருக்கிறார். சங்கீதம் 104:30-யும் 2 பேதுரு 1:20, 21-யும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • யெகோவா தன் சக்தியை வைத்து என்னவெல்லாம் செய்திருக்கிறார்?

5. யெகோவாவின் அருமையான குணங்கள்

மோசே பல வருஷங்களாகக் கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்துவந்தார். ஆனாலும், கடவுளைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார். அதனால் கடவுளிடம், “தயவுசெய்து உங்கள் வழிகளை எனக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போதுதான் நான் உங்களை நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும்” என்று கெஞ்சினார். (யாத்திராகமம் 33:13) கடவுளும் தன்னுடைய குணங்களைப் பற்றி மோசேயிடம் சொன்னார். யாத்திராகமம் 34:4-6-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • தனக்கு என்னென்ன குணங்கள் இருப்பதாக மோசேயிடம் யெகோவா சொன்னார்?

  • யெகோவாவின் குணங்களில் உங்களுக்கு ரொம்பப் பிடித்தது எது?

6. யெகோவாவுக்கு நம்மேல் அக்கறை இருக்கிறது

இஸ்ரவேலர்கள் கடவுளுடைய மக்களாக இருந்தார்கள். அவர்கள் எகிப்தில் அடிமைகளாகக் கஷ்டப்பட்டதைப் பார்த்தபோது அவருக்கு எப்படி இருந்திருக்கும்? யாத்திராகமம் 3:1-10-ஐ வாசியுங்கள் அல்லது இந்த வசனங்களை பைபிளில் பார்த்தபடியே ஆடியோவைக் கேளுங்கள். பிறகு, கீழே இருக்கிற கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • நாம் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது யெகோவாவுக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?​—வசனங்கள் 7, 8-ஐப் பாருங்கள்.

  • நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று யெகோவா உண்மையிலேயே விரும்புகிறாரா? நமக்கு உதவி செய்ய அவரால் முடியும் என்று நினைக்கிறீர்களா? ஏன்?

7. யெகோவாவின் குணங்கள் இயற்கையில் தெரிகின்றன

படைப்புகள் மூலமாக யெகோவா தன்னுடைய குணங்களை நமக்குக் காட்டியிருக்கிறார். வீடியோவைப் பாருங்கள். பிறகு, ரோமர் 1:20-ஐப் படித்துவிட்டு, கீழே இருக்கிற கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • படைப்புகளில் யெகோவாவின் குணங்களை உங்களால் பார்க்க முடிகிறதா? என்ன குணங்களைப் பார்க்கிறீர்கள்?

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “கடவுள் ஒரு சக்திதான். அவரு எல்லா இடத்திலயும் இருப்பாரு.”

  • நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?

சுருக்கம்

யெகோவாவை நம்மால் பார்க்க முடியாது. அவரிடம் அன்பு போன்ற நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன.

ஞாபகம் வருகிறதா?

  • நம்மால் ஏன் யெகோவாவைப் பார்க்க முடியாது?

  • கடவுளுடைய சக்தியைப் பற்றி என்ன தெரிந்துகொண்டீர்கள்?

  • யெகோவாவுக்கு என்னென்ன குணங்கள் இருக்கின்றன?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

யெகோவாவிடம் இருக்கிற நான்கு முக்கியமான குணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

“கடவுள் எப்படிப்பட்டவர்?” (காவற்கோபுரம் எண் 1, 2019)

யெகோவா தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று ஏன் சொல்ல முடியாது?

“கடவுள் எங்கும் இருப்பார், எதிலும் இருப்பார் என்பது உண்மையா?” (ஆன்லைன் கட்டுரை)

பைபிள் ஏன் கடவுளுடைய சக்தியை அவருடைய கைகள் என்று சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

“பரிசுத்த ஆவி என்பது என்ன?” (ஆன்லைன் கட்டுரை)

பார்வையில்லாத ஒருவர், கடவுளுக்குத் தன்மேல் அக்கறையே இல்லை என்று நினைத்தார். அவருடைய எண்ணம் எப்படி மாறியது?

“யெகோவா என்னை மறக்கல” (காவற்கோபுரம் எண் 1, 2016)