Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 15

இயேசு யார்?

இயேசு யார்?

சரித்திரத்தில் ரொம்பப் பிரபலமான ஒருவர்தான் இயேசு. நிறைய பேருக்கு அவருடைய பெயர் தெரிந்திருந்தாலும், அவரைப் பற்றிய மற்ற விவரங்களெல்லாம் அவ்வளவாகத் தெரியாது. இயேசு யார் என்று கேட்டால் ஆளுக்கொரு விதமாகச் சொல்கிறார்கள். பைபிள் அவரைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

1. இயேசு யார்?

இயேசு ‘படைப்புகளிலேயே முதல் படைப்பு’ என்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 1:15) ஏனென்றால், யெகோவா அவரைத்தான் முதன்முதலில் படைத்தார். இயேசு பரலோகத்தில் மிகவும் சக்திபடைத்த ஒருவராக இருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் கடவுளுடைய “ஒரே மகன்” என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 3:16) ஏனென்றால், இயேசுவை மட்டும்தான் யெகோவா நேரடியாகப் படைத்தார். யெகோவா எல்லாவற்றையும் படைத்தபோது இயேசு அவரோடு சேர்ந்து வேலை செய்தார். (நீதிமொழிகள் 8:30-ஐ வாசியுங்கள்.) இன்றுவரை இயேசு யெகோவாவின் செல்லப்பிள்ளைதான். அவர் யெகோவாவின் செய்திகளையும் அறிவுரைகளையும் மற்றவர்களிடம் சொல்கிறார். இப்படி, அவர் எப்போதும் யெகோவாவின் சார்பில் பேசுவதால் பைபிள் அவரை “வார்த்தை” என்று சொல்கிறது.—யோவான் 1:14.

2. இயேசு ஏன் பூமிக்கு வந்தார்?

சுமார் 2,000 வருஷங்களுக்கு முன்பு, யெகோவா தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி ஒரு பெரிய அற்புதத்தைச் செய்தார். பரலோகத்திலிருந்த இயேசுவின் உயிரைப் பூமியிலிருந்த மரியாள் என்ற கன்னிப்பெண்ணின் வயிற்றுக்கு மாற்றினார். இப்படி, இயேசு ஒரு மனிதராகப் பிறந்தார். (லூக்கா 1:34, 35-ஐ வாசியுங்கள்.) மேசியாவை/கிறிஸ்துவை பற்றி முன்னறிவிக்கப்பட்டதை நிறைவேற்றவும் மனிதர்களை மீட்கவும்தான் இயேசு இந்தப் பூமிக்கு வந்தார். a மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் எல்லாமே இயேசுவுக்குப் பொருந்தின. அதனால், இயேசுதான் “கிறிஸ்து, உயிருள்ள கடவுளுடைய மகன்” என்று மக்கள் புரிந்துகொண்டார்கள்.—மத்தேயு 16:16.

3. இயேசு இப்போது எங்கே இருக்கிறார்?

ஒரு மனிதனாக இயேசு இறந்த பிறகு கடவுள் அவருக்குப் பரலோகத்துக்குரிய உடலைக் கொடுத்து உயிரோடு எழுப்பினார். பிறகு, இயேசு பரலோகத்துக்குத் திரும்பிப் போனார். அங்கே “கடவுள் அவரை மேலான நிலைக்கு உயர்த்தினார்.” (பிலிப்பியர் 2:9) அதனால், இந்தப் பிரபஞ்சத்திலேயே யெகோவாவுக்கு அடுத்தபடியாக இயேசுவுக்குத்தான் அதிக அதிகாரம் இருக்கிறது.

ஆராய்ந்து பார்க்கலாம்!

இயேசு உண்மையிலேயே யார் என்றும், அவரைப் பற்றித் தெரிந்துகொள்வது ஏன் ரொம்ப முக்கியம் என்றும் இப்போது கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம்.

4. இயேசு சர்வவல்லமையுள்ள கடவுள் கிடையாது

இயேசு பரலோகத்தில் மிகவும் சக்திபடைத்த ஒருவராக இருக்கிறார். ஆனாலும், தன் கடவுளாகவும் தகப்பனாகவும் இருக்கிற யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார். இயேசுவும் சர்வவல்லமையுள்ள கடவுளும் ஒன்று கிடையாது என்று பைபிள் சொல்கிறது. அதைப் பற்றி வீடியோவில் பாருங்கள்.

இயேசுவுக்கும் யெகோவாவுக்கும் என்ன உறவுமுறை இருக்கிறதென்று இந்த வசனங்கள் சொல்கின்றன. அவற்றைப் படித்துவிட்டு, கேள்விகளைக் கலந்துபேசுங்கள்:

லூக்கா 1:30-32-ஐ வாசியுங்கள்.

  • ‘உன்னதமான கடவுளாகிய’ யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் என்ன உறவுமுறை இருப்பதாகத் தேவதூதர் சொன்னார்?

மத்தேயு 3:16, 17-ஐ வாசியுங்கள்.

  • இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது, வானத்திலிருந்து வந்த குரல் என்ன சொன்னது?

  • அது யாருடைய குரல் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

யோவான் 14:28-ஐ வாசியுங்கள்.

  • யார் பெரியவர், யாருக்கு அதிக அதிகாரம் இருக்கிறது, தகப்பனுக்கா மகனுக்கா?

  • யெகோவாவைத் தகப்பன் என்று இயேசு சொன்னதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?

யோவான் 12:49-ஐ வாசியுங்கள்.

  • தானும் தன் தகப்பனும் ஒருவர்தான் என்று இயேசு சொன்னாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

5. இயேசுதான் மேசியா என்பதற்கான அத்தாட்சிகள்

மனிதர்களைக் காப்பாற்றுவதற்காகக் கடவுள் தேர்ந்தெடுத்தவர்தான் மேசியா. மேசியாவைப் பற்றிய நிறைய தீர்க்கதரிசனங்கள் பைபிளில் இருக்கின்றன. அவர் யார் என்று கண்டுபிடிக்க இந்தத் தீர்க்கதரிசனங்கள் மக்களுக்கு உதவி செய்தன. இயேசு பூமிக்கு வந்தபோது அதையெல்லாம் நிறைவேற்றினார். அதில் சிலவற்றை வீடியோவில் பாருங்கள்.

பைபிளில் சொல்லப்பட்ட இந்தத் தீர்க்கதரிசனங்களைப் படித்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

மீகா 5:2-ஐ வாசியுங்கள். இயேசு எங்கே பிறப்பார் என்று இந்தத் தீர்க்கதரிசனம் சொன்னது. b

  • அந்த இடத்தில்தான் இயேசு பிறந்தாரா?—மத்தேயு 2:1.

சங்கீதம் 34:20-ஐயும் சகரியா 12:10-ஐயும் வாசியுங்கள். மேசியாவின் மரணத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லப்பட்ட விவரங்கள் இந்த வசனங்களில் இருக்கின்றன.

  • இந்தத் தீர்க்கதரிசனங்களில் சொல்லப்பட்டதுபோல் உண்மையில் நடந்ததா?—யோவான் 19:33-37.

  • இந்தத் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுவதற்கு இயேசு ஏதாவது திட்டம்போட்டு செய்தாரா?

  • இதிலிருந்து இயேசுவைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்துகொள்கிறீர்கள்?

6. இயேசுவைப் பற்றிக் கற்றுக்கொள்வதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள்

இயேசுவைப் பற்றியும் அவருக்குக் கடவுள் கொடுத்த பொறுப்பைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம் என்று பைபிள் சொல்கிறது. யோவான் 14:6-ஐயும் 17:3-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • இயேசுவைப் பற்றிக் கற்றுக்கொள்வது ஏன் ரொம்ப முக்கியம்?

நாம் கடவுளுடைய நண்பராவதற்கு இயேசு வழியை திறந்துவைத்தார். யெகோவாவைப் பற்றிய சத்தியத்தை சொல்லிக்கொடுத்தார். அவர் மூலமாகத்தான் நமக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “யெகோவாவின் சாட்சிகள் இயேசுவை நம்புறது இல்ல.”

  • நீங்கள் எப்படிப் பதில் சொல்வீர்கள்?

சுருக்கம்

இயேசு சக்தியுள்ள ஒரு தேவதூதர். அவர்தான் கடவுளுடைய மகன், அவர்தான் மேசியா.

ஞாபகம் வருகிறதா?

  • பைபிள் ஏன் இயேசுவை ‘படைப்புகளிலேயே முதல் படைப்பு’ என்று சொல்கிறது?

  • பூமிக்கு வருவதற்கு முன்பு இயேசு என்ன செய்துகொண்டிருந்தார்?

  • இயேசுதான் மேசியா என்று நமக்கு எப்படித் தெரியும்?

குறிக்கோள்

அலசிப் பாருங்கள்

இயேசுதான் மேசியா என்று எப்படிச் சொல்லலாம்? இதைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

“மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் இயேசுதான் மேசியா என்பதை நிரூபிக்கின்றனவா?” (ஆன்லைன் கட்டுரை)

மனிதர்களுக்குப் பிள்ளைகள் பிறப்பது போலத்தான் கடவுளுக்கும் இயேசு பிறந்தாரா? பைபிள் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.

“இயேசு ஏன் கடவுளுடைய மகன் என்று அழைக்கப்படுகிறார்?” (ஆன்லைன் கட்டுரை)

திரித்துவக் கோட்பாடு பைபிள் போதனை கிடையாது. ஏன் அப்படிச் சொல்லலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

“இயேசு கடவுளா?” (ஆன்லைன் கட்டுரை)

இயேசுவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறதென்று தெரிந்துகொண்ட பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி மாறியது என்று படித்துப் பாருங்கள்.

“ஒரு யூதப் பெண் தன்னுடைய மத நம்பிக்கைகளை ஏன் மறுபரிசீலனை செய்தார்?” (ஆன்லைன் கட்டுரை)

a மனிதர்களுக்கு ஏன் மீட்பு தேவை? இயேசு எப்படி மனிதர்களை மீட்கிறார்? பதில்: பாடம் 26, 27.

b எந்த வருஷத்தில் மேசியா பூமியில் தோன்றுவார் என்ற தீர்க்கதரிசனத்தைப் பற்றி பின்குறிப்பு 2-ல் பாருங்கள்.