Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் ஒன்று

கடவுளைப் பற்றிய உண்மைகள் யாவை?

கடவுளைப் பற்றிய உண்மைகள் யாவை?
  •  கடவுளுக்கு உங்கள் மீது நிஜமாகவே அக்கறை இருக்கிறதா?

  • கடவுள் எப்படிப்பட்டவர், அவருக்கு ஒரு பெயர் இருக்கிறதா?

  • கடவுளிடம் நெருங்கி வர முடியுமா?

1, 2. கேள்விகள் கேட்பது ஏன் பெரும்பாலும் நல்லது?

குழந்தைகள் கேள்வி கேட்கும் விதத்தை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? பெரும்பாலான குழந்தைகள், பேச ஆரம்பித்ததுமே கேள்விக்கு மேல் கேள்விகளைக் கேட்பார்கள். கண்களை அகல விரித்தபடி, ஆர்வமாக உங்களைப் பார்த்து: ‘வானம் ஏன் ப்ளூ கலர்ல இருக்கு? நட்சத்திரங்கள் ஏன் மினுமினுக்குது? பாட்டுப் பாட பறவைகளுக்கு யார் சொல்லித் தந்தது?’ போன்ற கேள்விகளைக் கேட்பார்கள். நீங்களும் ஒருவேளை ரொம்பக் கஷ்டப்பட்டு பதில் சொல்வீர்கள், ஆனால் அப்படிப் பதில் சொல்வது எப்போதுமே சுலபமல்ல. ஒருவேளை கஷ்டப்பட்டு பதில் சொன்ன பிறகும்கூட, ஏன் என்று மறுபடியும் இன்னொரு கேள்வியைக் கேட்பார்கள்.

2 குழந்தைகள் மட்டும்தான் இப்படிக் கேள்வி கேட்கிறார்களா? இல்லை, வளர வளர நாமும்கூட நிறைய கேள்விகளைக் கேட்கிறோம். உதாரணத்திற்கு, போக வேண்டிய இடத்தின் வழியைத் தெரிந்து கொள்வதற்காக, என்னென்ன ஆபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்காக, அல்லது நம்முடைய ஆர்வப்பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக நிறைய கேள்விகளைக் கேட்கிறோம். ஆனால் அநேகர் கேள்விகள் கேட்பதையே, அதுவும் மிக முக்கியமான கேள்விகளைக் கேட்பதையே நிறுத்திவிட்டிருப்பது போல் தெரிகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், பதில்கள் தேடுவதையே நிறுத்திவிட்டிருக்கிறார்கள்.

3.மிக முக்கியமான கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டுபிடிப்பதை ஏன் அநேகர் நிறுத்திவிட்டிருக்கிறார்கள்?

3 இந்தப் புத்தகத்தின் அட்டையிலுள்ள கேள்வியையும், 3-ம் பக்கத்திலுள்ள கேள்விகளையும்,  இந்த அதிகாரத்தின் தொடக்கத்திலுள்ள கேள்விகளையும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். மிக முக்கியமான அந்தக் கேள்விகளை ஒருவேளை நீங்களும் கேட்கலாம். இருந்தாலும், அநேகர் அவற்றிற்கான பதில்களைக் கண்டுபிடிப்பதையே நிறுத்திவிட்டிருக்கிறார்கள். ஏன் நிறுத்திவிட்டிருக்கிறார்கள்? அவற்றிற்குரிய பதில்கள் பைபிளில் இருக்கின்றனவா? பைபிளிலுள்ள பதில்களை அவ்வளவு சுலபமாகப் புரிந்துகொள்ள முடியாதென்று சிலர் நினைக்கிறார்கள். வேறு சிலரோ, அப்படிக் கேள்விகள் கேட்டால் எங்கே மற்றவர்கள் தங்களைக் கேவலமாக நினைத்துவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். இன்னும் சிலரோ, அத்தகைய கேள்விகளுக்கெல்லாம் மதத் தலைவர்களும் போதகர்களுமே பதில் சொல்ல முடியுமென்ற தீர்மானத்திற்கு வந்துவிடுகிறார்கள். உங்களைப் பற்றி என்ன?

4, 5. வாழ்க்கையில் நாம் கேட்க நினைக்கும் முக்கியமான சில கேள்விகள் யாவை, அதற்கான பதில்களை நாம் ஏன் தேட வேண்டும்?

4 வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்விகளுக்குப் பதில்களைப் பெற வேண்டுமென்ற ஆசை ஒருவேளை உங்களுக்கு இருக்கலாம். ‘வாழ்க்கையின் நோக்கம் என்ன? இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? கடவுள் உண்மையிலேயே எப்படிப்பட்டவர்?’ போன்ற கேள்விகள் சில சமயங்களில் உங்கள் மனதில் எழும்பியிருக்கும். இத்தகைய கேள்விகளைக் கேட்பது நல்லது; அவற்றிற்குரிய திருப்தியான, நம்பகமான பதில்களைக் கண்டுபிடிக்கும்வரை உங்கள் முயற்சியைக் கைவிடாதிருப்பது மிக முக்கியம். “கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டடைவீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும்” என்று பிரபல போதகரான இயேசு கிறிஸ்து சொன்னார்.—மத்தேயு 7:7, NW.

5 முக்கியமான கேள்விகளுக்குப் பதில்களைத் “தேடிக்கொண்டே” இருப்பது எவ்வளவு நன்மை அளிக்கும் என்பதைப் பிற்பாடு நீங்களே புரிந்துகொள்வீர்கள். (நீதிமொழிகள் 2:1-5) மற்றவர்கள் உங்களிடம் என்ன சொல்லியிருந்தாலும் சரி, அந்தக் கேள்விகளுக்கு உண்மையிலேயே பதில்கள் இருக்கின்றன. அவற்றை நிச்சயம் உங்களால் கண்டடைய முடியும்​—⁠ஆம், பைபிளில் கண்டடைய முடியும். அந்தப் பதில்களைப் புரிந்துகொள்வது அப்படியொன்றும் கடினமல்ல. இன்னும் சொல்லப்போனால், அவை எதிர்கால நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் அளிக்கின்றன. அதுமட்டுமா, இப்போதேகூட நீங்கள் திருப்தியாக வாழ உதவுகின்றன. எனவே மற்ற விஷயங்களைச் சிந்திக்கும் முன், அநேகருடைய மனதைக் குடையும் ஒரு கேள்வியை இப்போது நாம் சிந்திக்கலாம்.

கடவுள் அக்கறையற்றவரா, கல்நெஞ்சக்காரரா?

6.மனிதர் படும் கஷ்டங்களைக் குறித்து கடவுள் அக்கறையற்றவராக இருக்கிறார் என ஏன் அநேகர் நினைக்கிறார்கள்?

6 ஆம், அப்படித்தான் என்றே அநேகர் நினைக்கிறார்கள். ‘கடவுளுக்கு நம்மீது அக்கறை இருந்தால், இந்த உலகம் இப்படியா இருக்கும்?’ என்று அவர்கள் கேட்கிறார்கள். இந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும் போரும் பகைமையும் துயரமும்தான் இருக்கிறது. தனிப்பட்டவர்களாக நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது நோய் வந்துவிடுகிறது, கஷ்டம் ஏற்பட்டுவிடுகிறது, பிரியமானவர்கள் இறந்துவிடுகிறார்கள். எனவே, ‘நம்மீது கடவுளுக்குக் கொஞ்சமாவது அக்கறை இருந்தால், அதெல்லாம் நடக்காதவாறு அவர் தடுத்திருப்பார் இல்லையா?’ என்று அநேகர் கேட்கிறார்கள்.

7.(அ) கடவுள் கல்நெஞ்சக்காரர் என்று மதப் போதகர்கள் எப்படி அநேகரை நினைக்க வைத்திருக்கிறார்கள்? (ஆ) நமக்கு வருகிற சோதனைகளைப் பற்றி பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?

7 ஆனால், கடவுள் கல்நெஞ்சக்காரர் எனச் சிலசமயம் மதப் போதகர்கள் ஜனங்களை நினைக்கும்படி செய்வதுதான் அதைவிடக் கொடுமை. அது எப்படி? திடீரென ஏதாவது துயரச் சம்பவம் நிகழும்போது, அது கடவுளுடைய சித்தம் என்று ஜனங்களிடம் அவர்கள் சொல்கிறார்கள். இவ்விதத்தில், துயரச் சம்பவங்களுக்குக் கடவுளே காரணமென்று பழிபோடுகிறார்கள். ஆனால், நிஜமாகவே கடவுள்தான் காரணமா? பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? யாக்கோபு 1:13 இதற்குப் பதிலளிக்கிறது: “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.” எனவே, உலகத்தில் நடக்கிற அக்கிரமங்களுக்கு ஒருபோதும் கடவுள் காரணமல்ல. (யோபு 34:10-12) கெட்ட காரியங்கள் நடப்பதை அவர் அனுமதிக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், ஒரு காரியத்தை அனுமதிப்பதற்கும் அதற்குக் காரணமாயிருப்பதற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது.

8, 9. (அ) அக்கிரமங்களை அனுமதிப்பதற்கும் அதற்குக் காரணமாயிருப்பதற்கும் இடையே வித்தியாசம் இருப்பதை எப்படி உதாரணத்துடன் விளக்குவீர்கள்? (ஆ) மனம்போன போக்கில் செல்ல மனிதர்களை அனுமதித்ததற்காக, கடவுளைக் குற்றப்படுத்துவது ஏன் சரியல்ல?

8 உதாரணமாக, அன்பும் அறிவும் உள்ள ஒரு அப்பாவைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அவருக்கு ஒரு பெரிய பையன் இருக்கிறான். ஆனால் அவன் ஓர் அடங்காப்பிடாரியாக மாறி, வீட்டை விட்டே வெளியேற முடிவு செய்கிறான். அவனுடைய அப்பா அதைத் தடுப்பதில்லை. அதன்பின் மோசமான வழியில் போய் பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறான். அப்படியானால், அவனுடைய பிரச்சினைகளுக்குக் காரணம் அவனுடைய அப்பாவா? இல்லவே இல்லை. (லூக்கா 15:11-13) அதுபோலவே, மனிதர்கள் மோசமான வழியில் போகத் தீர்மானித்தபோது அவர்களைக் கடவுள் தடுக்கவில்லை, என்றாலும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அவர் காரணம் அல்ல. ஆகையால், மனிதர்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் கடவுளைக் குற்றப்படுத்துவது நிச்சயமாகவே சரியல்ல.

9 மனிதர்களை மோசமான வழியில் செல்ல அனுமதித்திருப்பதற்குக் கடவுளுடைய பங்கில் நியாயமான காரணங்கள் இருக்கின்றன. வல்லமையும் ஞானமும் உள்ள நம் படைப்பாளர், அந்தக் காரணங்களையெல்லாம் நம்மிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், நம் மீதுள்ள அன்பின் காரணமாக அவற்றை நம்மிடம் விளக்குகிறார். இதைப் பற்றி 11-ம் அதிகாரத்தில் நாம் அதிகமாகக் கற்றுக்கொள்வோம். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள், நம்முடைய பிரச்சினைகளுக்குக் கடவுள் பொறுப்பாளி அல்ல. மாறாக, பிரச்சினைகளிலிருந்து விடுவிப்பதற்கான ஒரே நம்பிக்கையை அளிக்கிறவர் அவர்!​—⁠சங்கீதம் 39:7.

10. அக்கிரமங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கடவுள் சரிசெய்வாரென நாம் ஏன் நம்பலாம்?

10 கடவுள் பரிசுத்தமானவரும்கூட. (ஏசாயா 6:3) அப்படியென்றால் அவர் தூய்மையானவர், கறைபடியாதவர் என்று அர்த்தம். கெட்ட எண்ணம் துளிகூட அவருக்குக் கிடையாது. எனவே நாம் அவரை முழுமையாக நம்பலாம். ஆனால் மனிதர்களை அதுபோல் முழுமையாக நம்ப முடியாது, ஏனென்றால் அவர்கள் சில சமயம் கெட்டவர்களாகி விடுகிறார்கள். கெட்ட ஜனங்களால் ஏற்படுகிற பாதிப்புகளை மிக நேர்மையான ஓர் அதிகாரியால்கூட சரிசெய்ய முடிவதில்லை. ஆனால் கடவுள் சர்வவல்லவர். அக்கிரமங்களால் மனிதகுலத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அவரால் சரிசெய்ய முடியும், சரிசெய்தே தீருவார். அப்படி அவர் சரிசெய்யும்போது, தீமை இனி தலைதூக்காதவாறு அதற்கு நிரந்தர முடிவு கட்டிவிடுவார்!—சங்கீதம் 37:9-11.

நமக்கு இழைக்கப்படுகிற அநியாயங்களைக் குறித்து கடவுள் எப்படி உணருகிறார்?

11. (அ) அநியாயத்தைக் குறித்து கடவுள் எப்படி உணருகிறார்? (ஆ) நீங்கள் படும் துன்பத்தைக் காண்கையில் கடவுள் எப்படி உணருகிறார்?

11 ஆனால் இப்போது இந்த உலகத்திலும் உங்கள் வாழ்க்கையிலும் நடக்கிற காரியங்களைப் பற்றி கடவுள் எப்படி உணருகிறார்? முதலாவதாக, கடவுள் “நியாயத்தை விரும்புகிறவர்” என்று பைபிள் கற்பிக்கிறது. (சங்கீதம் 37:28) ஆகவே, எது சரி எது தவறு என்பதைக் குறித்து அவர் மிகவும் அக்கறையுடையவராக இருக்கிறார். எல்லா விதமான அநியாயத்தையும் அவர் வெறுக்கிறார். முற்காலத்தில் உலகம் தீமையினால் நிறைந்திருந்தபோது, அது கடவுளுடைய “இருதயத்துக்கு விசனமாயிருந்தது” என பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 6:5, 6) கடவுள் மாறவில்லை. (மல்கியா 3:6) இன்றும்கூட, உலகில் துன்பத்தைக் காண அவர் விரும்புவதில்லை. ஜனங்கள் கஷ்டப்படுவதைக் காணவும் அவர் விரும்புவதில்லை. ஆம், “உங்கள் மீது அவர் அக்கறையுள்ளவராய் இருக்கிறார்” என்றே பைபிள் சொல்கிறது.—1 பேதுரு 5:7, NW.

யெகோவாதான் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த அன்பான கடவுள் என பைபிள் கற்பிக்கிறது

12, 13. (அ) அன்பு போன்ற நல்ல பண்புகள் நமக்கு ஏன் இருக்கின்றன, நமக்கு அன்பு இருப்பதால் உலகத்தில் நடப்பவற்றைக் குறித்து எப்படி உணருகிறோம்? (ஆ) உலக பிரச்சினைகளுக்குக் கடவுள் கட்டாயம் ஏதாவது செய்வார் என்று நீங்கள் ஏன் நம்பலாம்?

12 துன்பத்தைக் காண கடவுள் விரும்புவதில்லை என்று நாம் எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? இதோ, மற்றொரு அத்தாட்சி: மனிதர்கள் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறார்கள், ஆம், இதைத்தான் பைபிள் கற்பிக்கிறது. (ஆதியாகமம் 1:26) ஆக, நமக்கு நல்ல நல்ல பண்புகள் இருக்கிறதென்றால் கடவுளுக்கும் நல்ல நல்ல பண்புகள் இருக்கிறது என்று அர்த்தம். உதாரணத்திற்கு, அப்பாவி மக்கள் துன்பப்படுவதைப் பார்க்கும்போது நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அத்தகைய அநியாயங்களைக் குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், அதைவிட பல மடங்கு அதிகமாகக் கடவுள் கவலைப்படுகிறார் என்பதில் நிச்சயமாயிருங்கள்.

13 மனிதர்களிடமுள்ள மிகச் சிறந்த பண்புகளில் ஒன்று அன்பு காட்டும் தன்மையாகும். கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை இதுவும்கூட காண்பிக்கிறது, ஏனெனில், “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் கற்பிக்கிறது. (1 யோவான் 4:8) அவர் அன்புள்ளவராக இருப்பதால் நாமும் அன்புள்ளவர்களாக இருக்கிறோம். உங்களிடமுள்ள அந்த அன்பு, உலகிலுள்ள அநியாயத்திற்கும் துன்பத்திற்கும் முடிவுகட்ட உங்களைத் தூண்டுமா? அப்படிச் செய்ய உங்களுக்குச் சக்தி இருந்தால் அதை நீங்கள் செய்வீர்களா? கண்டிப்பாகச் செய்வீர்கள்! அப்படியானால், அநியாயத்திற்கும் துன்பத்திற்கும் கடவுள் முடிவுகட்டுவார் என்பதை நீங்கள் தாராளமாக நம்பலாம். இந்தப் புத்தகத்தின் 4, 5 ஆகிய பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளெல்லாம் வெறும் கனவோ வீண் ஆசையோ அல்ல. கடவுளுடைய வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேறும்! ஆனால், அந்த வாக்குறுதிகளை நம்ப வேண்டுமானால், அவற்றைக் கொடுத்த கடவுளைப் பற்றி நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும்.

தம்மைப் பற்றி நீங்கள் அறிய வேண்டுமென கடவுள் விரும்புகிறார்

உங்களைப் பற்றி ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டுமென நீங்கள் விரும்பினால், அவரிடம் உங்கள் பெயரைச் சொல்வீர்கள், அல்லவா? கடவுள் தம்முடைய பெயரை பைபிளில் தெரியப்படுத்தியிருக்கிறார்

14. கடவுளுடைய பெயர் என்ன, நாம் ஏன் அதைப் பயன்படுத்த வேண்டும்?

14 உங்களைப் பற்றி ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டுமென நீங்கள் விரும்பினால், பொதுவாக என்ன செய்வீர்கள்? அவரிடம் உங்கள் பெயரைச் சொல்வீர்கள், அல்லவா? அப்படியென்றால், கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறதா? “கடவுள்” அல்லது “கர்த்தர்” என்பதுதான் அவருடைய பெயரென அநேக மதங்கள் கற்பிக்கின்றன. ஆனால், “ராஜா,” “ஜனாதிபதி” போன்ற பட்டப் பெயர்களைப் போல அவையும் பட்டப் பெயர்கள்தான், சொந்தப் பெயர்கள் அல்ல. கடவுளுக்கு ஏராளமான பட்டப் பெயர்கள் இருப்பதாக பைபிள் கற்பிக்கிறது. “தேவன்,” “கர்த்தர்” போன்றவையும் அவற்றில் அடங்கும். என்றாலும், கடவுளுக்கென ஒரு பெயர் இருப்பதாகவும் பைபிள் கற்பிக்கிறது. அந்தப் பெயர்தான் யெகோவா. ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்’ என்று சங்கீதம் 83:17 சொல்கிறது. உங்களுடைய பைபிளில் அந்தப் பெயர் இல்லையென்றால், இப்புத்தகத்தில் பக்கங்கள் 195-7-ல் உள்ள பிற்சேர்க்கையைப் பார்த்து அதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். ஆனால் உண்மையில், பைபிளின் பூர்வ கையெழுத்துப் பிரதிகளில் கடவுளுடைய பெயர் ஆயிரக்கணக்கான தடவை காணப்படுகிறது. எனவே, அந்தப் பெயரை நீங்கள் அறிந்துகொண்டு, அதைப் பயன்படுத்த வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். பைபிளின் மூலம் தம்மையே அவர் உங்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறார் என்றும்கூட நாம் சொல்லலாம்.

15. யெகோவா என்ற பெயரின் அர்த்தம் என்ன?

15 அர்த்தம் பொதிந்த ஒரு பெயரை, கடவுள் தமக்குத் தாமே சூட்டிக்கொண்டார். யெகோவா என்ற அந்தப் பெயர், தம்முடைய ஒவ்வொரு வாக்கையும் காப்பாற்றுபவர் என்றும், தம்முடைய ஒவ்வொரு நோக்கத்தையும் நிறைவேற்றுபவர் என்றும் அர்த்தப்படுத்துகிறது. * கடவுளுடைய பெயர் பிரத்தியேகமானது, நிகரற்றது, அவருக்கு மட்டுமே சொந்தமானது. அநேக விதங்களில், யெகோவா நிகரற்ற கடவுளாகத் திகழ்கிறார். எப்படி?

16, 17. பின்வரும் பட்டப் பெயர்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்: (அ) ‘சர்வவல்லமையுள்ளவர்’? (ஆ) “நித்தியத்தின் ராஜா”? (இ) ‘சிருஷ்டிகர்’?

16 சங்கீதம் 83:17-ல் நாம் ஏற்கெனவே பார்த்தபடி, யெகோவா ‘ஒருவரே . . . உன்னதமானவர்’ என்று அழைக்கப்படுகிறார். அதுபோல, யெகோவா ஒருவரே ‘சர்வவல்லமையுள்ளவர்’ என்றும் அழைக்கப்படுகிறார். வெளிப்படுத்துதல் 15:3 இவ்வாறு சொல்கிறது: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள், பரிசுத்தவான்களின் [“நித்தியத்தின்,” NW] ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.” ‘சர்வவல்லமையுள்ளவர்’ என்ற பட்டப் பெயர், பிரபஞ்சத்திலுள்ள வேறு யாரைக் காட்டிலும் யெகோவாதான் அதிக சக்தி வாய்ந்தவர் என்பதை நமக்குக் கற்பிக்கிறது. அவருடைய சக்தி ஈடிணையற்றது; உன்னதமானது. “நித்தியத்தின் ராஜா” என்ற பட்டப் பெயர், மற்றொரு அர்த்தத்தில் யெகோவா நிகரற்றவர் என்பதை நினைவுபடுத்துகிறது. ஆம், அவர் ஒருவரே சதா காலங்களிலும் ஜீவித்திருக்கிறார். சங்கீதம் 90:2 இவ்வாறு சொல்கிறது: “நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.” இதைப் படிக்கும்போதே நமக்குப் பயபக்தியும் பிரமிப்பும் உண்டாகிறது, அல்லவா?

17 மற்றுமொரு விதத்திலும் யெகோவா நிகரற்றவர் எனச் சொல்லலாம், அதாவது அவர் ஒருவரே சிருஷ்டிகர். வெளிப்படுத்துதல் 4:11 இவ்வாறு சொல்கிறது: “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.” பரலோகத்திலுள்ள காணக்கூடாத ஆவி சிருஷ்டிகளானாலும் சரி, இரவு வானில் சிதறிக் கிடக்கிற நட்சத்திரங்களானாலும் சரி, மரங்களில் காய்த்துக் குலுங்கும் பழங்களானாலும் சரி, சமுத்திரங்களிலும் ஆறுகளிலும் நீந்திச் செல்கிற மீன்களானாலும் சரி, உங்கள் மனதிற்கு வருகிற எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர் யெகோவாவே!

யெகோவாவிடம் நீங்கள் நெருங்கி வர முடியுமா?

18. கடவுளிடம் நெருங்கி வரவே முடியாதென்று ஏன் சிலர் நினைக்கிறார்கள், ஆனால் பைபிள் என்ன கற்பிக்கிறது?

18 யெகோவாவின் பிரமிப்பூட்டும் பண்புகளைப் பற்றி வாசிக்கும்போது சிலருக்கு ஒருவித அச்சம் ஏற்படுகிறது. யெகோவா மிக மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பதால், அப்படிப்பட்ட மாபெரும் கடவுளோடு எப்படி நெருக்கமாக இருக்க முடியுமென்று நினைத்து சிலர் பயப்படுகிறார்கள், அல்லது அப்பேர்ப்பட்ட கடவுளுக்கு முன் தாங்கள் துளியும் அருகதை அற்றவர்கள் என நினைக்கிறார்கள். ஆனால் அப்படி நினைப்பது சரியா? இதற்கு நேர்மாறான ஒன்றையே பைபிள் கற்பிக்கிறது. யெகோவாவைப் பற்றிச் சொல்லும்போது, “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே” என்று அது குறிப்பிடுகிறது. (அப்போஸ்தலர் 17:27) அதுமட்டுமல்ல, “தேவனிடத்தில் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடத்தில் நெருங்கி வருவார்” என்றும் அது நம்மை ஊக்குவிக்கிறது.—யாக்கோபு 4:8, NW.

19. (அ) கடவுளிடம் நெருங்கி வர முதலாவது நாம் என்ன செய்யலாம், இதனால் என்ன நன்மை கிடைக்கும்? (ஆ) கடவுளுடைய பண்புகளில் உங்கள் மனதைக் கவர்ந்த பண்புகள் யாவை?

19 கடவுளிடம் நீங்கள் எப்படி நெருங்கி வர முடியும்? முதலாவதாக, இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதையே தொடர்ந்து செய்ய வேண்டும், அதாவது கடவுளைப் பற்றித் தொடர்ந்து அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இயேசு சொன்னார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே [“தொடர்ந்து அறிவைப் பெறுவதே,” NW] நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) ஆம், யெகோவாவையும் இயேசுவையும் பற்றித் தொடர்ந்து அறிவைப் பெற்றுக்கொள்வது ‘நித்திய ஜீவனுக்கு’ நம்மை வழிநடத்தும்! இதைத்தான் பைபிள் கற்பிக்கிறது. முன்னர் குறிப்பிட்டபடி, “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:16) மனதைக் கவருகிற இன்னும் பல அருமையான பண்புகள் யெகோவாவிடம் இருக்கின்றன. உதாரணத்திற்கு, யெகோவா “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்” என்று பைபிள் சொல்கிறது. (யாத்திராகமம் 34:6) அவர் ‘நல்லவராகவும், மன்னிக்கத் தயாராகவும் இருப்பவர்.’ (சங்கீதம் 86:5, NW) அவர் நீடிய பொறுமையுள்ளவர். (2 பேதுரு 3:9) உண்மையுள்ளவர். (1 கொரிந்தியர் 1:9) இந்தப் பண்புகளையும் மனதைக் கவருகிற வேறு பல பண்புகளையும் யெகோவா எப்படியெல்லாம் காண்பித்திருக்கிறார் என்பதை பைபிளை வாசிக்க வாசிக்க நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

20-22. (அ) கடவுளை நம்மால் பார்க்க முடியாது என்பதற்காக நாம் அவரிடம் நெருங்கி வரவே முடியாதா? விளக்கவும். (ஆ) உங்கள் மீது அக்கறையுள்ள சிலர் என்ன செய்யும்படி உங்களை வற்புறுத்தலாம், ஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

20 உண்மைதான், கடவுளை உங்களால் பார்க்க முடியாது, ஏனெனில் அவர் ஆவி ரூபத்தில் இருக்கிறார். (யோவான் 1:18; 4:24; 1 தீமோத்தேயு 1:17) ஆனால், பைபிளிலிருந்து அவரைப் பற்றிக் கற்றுக்கொள்ளும்போது அவரை ஒரு தனி நபராக உங்களால் அறிந்துகொள்ள முடியும். அப்போது சங்கீதக்காரனைப் போலவே உங்களாலும் ‘யெகோவாவின் இனிமையைக் காண’ முடியும். (சங்கீதம் 27:4, NW; ரோமர் 1:20) யெகோவாவைப் பற்றி எந்தளவுக்கு அதிகமாகக் கற்றுக்கொள்கிறீர்களோ அந்தளவுக்கு நிஜமான ஒரு நபராக அவர் உங்களுக்குத் தெரிவார், அதோடு அவரை நேசிப்பதற்கும் அவரிடம் நெருங்கி வருவதற்கும் இன்னுமதிகமான காரணங்கள் இருப்பதை உணருவீர்கள்.

ஒரு நல்ல தகப்பன் தன் பிள்ளைகளிடம் காட்டுகிற அன்பு, நம் பரலோகத் தகப்பன் நம்மிடம் காட்டுகிற மாபெரும் அன்பை படம்பிடித்துக் காட்டுகிறது

21 யெகோவாவை நம்முடைய தகப்பனாகக் கருதும்படி பைபிள் ஏன் கற்பிக்கிறது என்பதை நீங்கள் படிப்படியாகப் புரிந்துகொள்வீர்கள். (மத்தேயு 6:9) நமக்கு உயிர் தந்தவர் அவரே, அதுமட்டுமல்ல, ஓர் அன்பான அப்பா தன் பிள்ளைகளின் வாழ்க்கை மிகச் சிறந்த விதத்தில் அமைய வேண்டுமென்று விரும்புவது போலவே அவர் விரும்புகிறார். (சங்கீதம் 36:9) மனிதர்கள் யெகோவாவின் நண்பர்களாய் ஆக முடியுமென்றும் பைபிள் கற்பிக்கிறது. (யாக்கோபு 2:23) சற்று யோசித்துப் பாருங்கள்—இப்பிரபஞ்சத்தையே சிருஷ்டித்த கடவுளுடைய நண்பராக நீங்கள் ஆகலாம்!

22 உங்கள் மீது அக்கறையுள்ள சிலர், நீங்கள் பைபிளைக் கற்றுவருவதைப் பார்க்கும்போது இந்தப் படிப்பை நிறுத்திவிடுமாறு உங்களை வற்புறுத்தலாம். உங்களுடைய மத நம்பிக்கைகளை நீங்கள் மாற்றிக்கொள்வீர்களோ என அவர்கள் பயப்படலாம். ஆனால், நட்பிலேயே மிகச் சிறந்த நட்பை வளர்த்துக் கொள்வதைத் தடுக்க யாரையுமே அனுமதிக்காதீர்கள்.

23, 24. (அ) கற்றுவருகிற விஷயங்களைக் குறித்து நீங்கள் ஏன் தொடர்ந்து கேள்விகள் கேட்க வேண்டும்? (ஆ) அடுத்த அதிகாரம் எதைப் பற்றிச் சிந்திக்கும்?

23 ஆரம்பத்தில் சில விஷயங்களைப் புரிந்துகொள்வது உங்களுக்குக் கஷ்டமாகத்தான் தெரியும். ஆனால், கூச்சப்பட்டுக்கொண்டு சந்தேகங்களைக் கேட்காமலேயே இருந்து விடாதீர்கள். அப்படிக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்கு மனத்தாழ்மை அவசியப்படுகிறது. ஒரு சின்னப் பிள்ளையைப் போல் மனத்தாழ்மை காண்பிப்பது நல்லதென்று இயேசுவே சொல்லியிருக்கிறார். (மத்தேயு 18:2-4) ஆம், சின்னப் பிள்ளைகள் கேள்விக்கு மேல் கேள்வி கேட்பார்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். கடவுளைப் பற்றிக் கற்றுக்கொள்ள வாஞ்சையோடு இருந்த சிலரை பைபிள் புகழ்ந்து பேசுகிறது. காரணம்? தங்களுக்குக் கற்பிக்கப்படுவது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேதவசனங்களை அவர்கள் கவனமாக ஆராய்ந்ததே.—அப்போஸ்தலர் 17:11..

24 யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கான மிகச் சிறந்த வழி பைபிளை ஆராய்ந்து பார்ப்பதாகும். வேறெந்த புத்தகத்தைக் காட்டிலும் அது ஒரு வித்தியாசமான புத்தகம். எந்த விதத்தில்? அடுத்த அதிகாரம் இதைப் பற்றிச் சிந்திக்கும்.

^ பாரா. 15 கடவுளுடைய பெயரின் அர்த்தத்தையும் உச்சரிப்பையும் பற்றிய கூடுதலான தகவலுக்கு, பக்கங்கள் 195-7-ல் உள்ள பிற்சேர்க்கையைக் காண்க.