Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் பதினாறு

மெய் வணக்கத்தின் பக்கம் உறுதியாக நில்லுங்கள்

மெய் வணக்கத்தின் பக்கம் உறுதியாக நில்லுங்கள்
  • விக்கிரகங்களையும் மூதாதையரையும் வணங்குவது பற்றி பைபிள் என்ன கற்பிக்கிறது?

  • பண்டிகை நாட்களை கிறிஸ்தவர்கள் எவ்வாறு கருதுகிறார்கள்?

  • மற்றவர்களைப் புண்படுத்தாத விதத்தில் எவ்வாறு உங்களுடைய நம்பிக்கைகளை விளக்கலாம்?

1, 2. பொய் மதத்தைவிட்டு வந்த பிறகு என்ன கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும், இப்படிக் கேட்டுக்கொள்வது ஏன் முக்கியம்?

நீங்கள் வசிக்கும் பகுதி முழுவதும் நச்சுப்பொருள்களால் மாசுபட்டிருக்கிறது என்ற விஷயம் உங்களுக்கு ஒருநாள் தெரிய வருகிறது என வைத்துக்கொள்ளுங்கள். நச்சுத்தன்மையுள்ள கழிவுப்பொருள்களை யாரோ அந்த இடத்தில் இரகசியமாய்க் கொட்டி வந்திருக்கிறார்கள், இப்போது அங்குள்ள எல்லாருடைய உயிரும் ஆபத்திலிருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு வேறொரு இடத்திற்குப் போக முடிந்தால், கட்டாயம் நீங்கள் அதைத்தான் செய்வீர்கள். அப்படியே வேறு இடத்திற்குப் போன பிறகும், ‘என் உடம்பில் அந்த நச்சு கலந்திருக்குமோ?’ என்ற கேள்விதான் தொடர்ந்து உங்கள் மனதில் இருக்கும்.

2 பொய் மதங்களைக் குறித்ததிலும் இதுபோன்ற ஒரு சூழ்நிலையே இருக்கிறது. இத்தகைய மதங்கள் அசுத்தமான போதனைகளாலும் பழக்கவழக்கங்களாலும் மாசுபட்டிருக்கின்றன என்று பைபிள் கற்பிக்கிறது. (2 கொரிந்தியர் 6:17) அதனால்தான் பொய் மத உலகப் பேரரசான ‘மகா பாபிலோனை’ விட்டு நீங்கள் வெளியேறுவது மிக முக்கியமாக இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 18:2, 4) நீங்கள் அவ்வாறு வெளியேறிவிட்டீர்களா? ஆம் என்றால், நிச்சயம் உங்களைப் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் ஒரு பொய் மதத்தைவிட்டு வெறுமனே விலகியிருப்பதோ வெளியேறுவதோ மட்டும் போதாது. ‘பொய் வணக்கத்தின் எந்தக் கறையாவது இன்னும் என்னோடு ஒட்டிக்கொண்டிருக்கிறதா?’ என உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளவும் வேண்டும். சில உதாரணங்களைக் கவனியுங்கள்.

விக்கிரகங்களும் மூதாதையர் வழிபாடும்

3. (அ) விக்கிரகங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது, இதன் பேரில் கடவுளுடைய கருத்தை ஏற்றுக்கொள்வது சிலருக்கு ஏன் கடினமாக இருக்கலாம்? (ஆ) பொய் வணக்கத்துடன் சம்பந்தப்பட்ட உங்களுடைய எல்லாப் பொருள்களையும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

3 சிலர் தங்கள் வீடுகளில் விக்கிரகங்களையோ பூஜை பீடங்களையோ வருடக்கணக்காக வைத்திருக்கிறார்கள். உங்கள் வீட்டிலும் அவை இருக்கின்றனவா? ஆம் என்றால், பார்க்க முடிகிற அத்தகைய பொருள்கள் இல்லாமல் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது உங்களுக்கு விசித்திரமாக அல்லது தவறாகத் தோன்றலாம். அப்படிப்பட்ட சில பொருள்களை விட்டுப்பிரிய உங்களுக்கு மனமில்லாமல்கூட இருக்கலாம். ஆனால் தம்மை எப்படி வணங்க வேண்டுமென்று கடவுளே சொல்லியிருக்கிறார்; நாம் விக்கிரகங்களைப் பயன்படுத்துவதை அவர் விரும்புவதில்லை என்று பைபிளில் கற்பித்திருக்கிறார். (யாத்திராகமம் 20:4, 5; சங்கீதம் 115:4-8; ஏசாயா 42:8; 1 யோவான் 5:21) ஆகவே, பொய் வணக்கத்துடன் சம்பந்தப்பட்ட உங்களுடைய எல்லாப் பொருள்களையும் ஒழித்துக்கட்டுவதன் மூலம் மெய் வணக்கத்தின் பக்கம் உறுதியாக நிற்பதை நீங்கள் காட்டலாம். அந்தப் பொருள்களை யெகோவா எந்தளவுக்கு ‘அருவருப்பாகக்’ கருதுகிறாரோ அந்தளவுக்கு நீங்களும் அருவருப்பாகக் கருத வேண்டும்.—உபாகமம் 27:15.

4. (அ) மூதாதையரை வழிபடும் பழக்கம் வீண் என்பது நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) ஆவியுலகத் தொடர்பு சம்பந்தப்பட்ட வேறெந்தப் பழக்கங்களிலும் ஈடுபடக் கூடாதென யெகோவா தம் மக்களுக்கு ஏன் கட்டளையிட்டார்?

4 மூதாதையரை வழிபடும் பழக்கமும்கூட அநேக பொய் மதங்களில் சகஜமாக உள்ளது. இறந்துபோனவர்கள், காணக்கூடாத ஓர் உலகில் உணர்வுடன் இருப்பதாகவும் உயிரோடிருப்பவர்களுக்கு அவர்கள் நன்மையோ தீமையோ செய்ய முடியும் என்பதாகவும் பைபிள் சத்தியங்களைப் படிப்பதற்கு முன் சிலர் நம்பியிருந்தார்கள். இறந்த உங்கள் மூதாதையரைச் சாந்தப்படுத்துவதற்காக நீங்களும்கூட ஒருவேளை கஷ்டப்பட்டு ஏதேதோ செய்திருப்பீர்கள். ஆனால், 6-ம் அதிகாரத்தில் கற்றுக்கொண்டபடி, இறந்தவர்கள் எந்த இடத்திலேயும் உணர்வுள்ளவர்களாய் வாழ்வதில்லை. எனவே, அவர்களோடு தொடர்புகொள்ள எடுக்கப்படுகிற எந்த முயற்சியும் வீணே. இறந்த அன்பான ஒருவரிடமிருந்து வருவதாகத் தோன்றுகிற எந்தச் செய்தியும் உண்மையில் பேய்களிடமிருந்தே வருகிறது. அதனால்தான், இறந்தவர்களிடம் பேச முயலக் கூடாதென்றும், ஆவியுலகத் தொடர்பு சம்பந்தப்பட்ட வேறெந்தப் பழக்கங்களிலும் ஈடுபடக் கூடாதென்றும் இஸ்ரவேலருக்கு யெகோவா கட்டளையிட்டார்.—உபாகமம் 18:10-12.

5. விக்கிரகங்களையோ மூதாதையரையோ வழிபடுகிற பழக்கம் முன்பு உங்களுக்கு இருந்திருந்தால், நீங்கள் என்ன செய்யலாம்?

5 விக்கிரகங்களையோ மூதாதையரையோ வழிபடுகிற பழக்கம் முன்பு உங்களுக்கு இருந்திருந்தால், இப்போது நீங்கள் என்ன செய்யலாம்? இந்த விஷயங்களைக் கடவுள் எப்படிக் கருதுகிறார் என்பதைக் காண்பிக்கும் பைபிள் வசனங்களை வாசித்து, அவற்றை ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். மெய் வணக்கத்தின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டுமென்ற உங்கள் விருப்பத்தை யெகோவாவிடம் தினந்தோறும் ஜெபத்தில் தெரிவியுங்கள், அவரைப் போலவே சிந்திப்பதற்கு உதவுமாறும் அவரிடம் கேளுங்கள்.—ஏசாயா 55:9.

கிறிஸ்மஸ்—ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கொண்டாடவில்லை

6, 7. (அ) கிறிஸ்மஸ் யாருடைய நினைவாகக் கொண்டாடப்படுவதாய் சொல்லப்படுகிறது, இயேசுவின் முதல் நூற்றாண்டு சீஷர்கள் அதைக் கொண்டாடினார்களா? (ஆ) இயேசுவின் ஆரம்பகால சீஷர்கள் வாழ்ந்த சமயத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எவற்றோடு சம்பந்தப்பட்டிருந்தன?

6 பிரபலமான பண்டிகை நாட்கள் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் பொய் மதம் ஒரு நபரின் வணக்கத்தை மாசுபடுத்திவிடக்கூடும். உதாரணத்திற்கு கிறிஸ்மஸ் பண்டிகையை எடுத்துக்கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவுடைய பிறந்த நாளின் நினைவாகக் கொண்டாடப்படுகிற பண்டிகை என அது சொல்லப்படுகிறது; கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கிட்டத்தட்ட எல்லா மதத் தொகுதியினருமே அதைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், இயேசுவின் முதல் நூற்றாண்டு சீஷர்கள் அத்தகைய ஒரு பண்டிகையைக் கொண்டாடினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆழமான காரியங்களின் புனித ஆரம்பங்கள் என்ற ஆங்கிலப் புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “கிறிஸ்து பிறந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு அவருடைய பிறந்த தேதியை யாருமே நினைவில் வைக்கவில்லை, அதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள அவர்கள் ஆர்வமும் காட்டவில்லை.”

7 இயேசுவின் பிறந்த நாள் எதுவென்று அவருடைய சீஷர்களுக்கு ஒருவேளை துல்லியமாகத் தெரிந்திருந்தால்கூட, அதை நிச்சயம் அவர்கள் கொண்டாடியிருக்க மாட்டார்கள். ஏன்? ஏனென்றால், ஆரம்பகால கிறிஸ்தவர்கள் “எந்தவொரு பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் புறமதப் பழக்கமாகவே கருதினார்கள்” என த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. யெகோவாவை வணங்காத இரண்டு ராஜாக்கள் மட்டுமே பிறந்த நாளைக் கொண்டாடியதாக பைபிள் குறிப்பிடுகிறது. (ஆதியாகமம் 40:20; மாற்கு 6:21) புறமதத் தெய்வங்களைக் கௌரவிப்பதற்காகவும் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்பட்டன. உதாரணத்திற்கு, ரோமர்கள் மே 24-⁠ம் தேதியன்று டயானா என்ற பெண் தெய்வத்தின் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். மறுநாள், தங்கள் சூரியக் கடவுளான அப்போலோவின் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். எனவே, பிறந்த நாள் கொண்டாட்டங்கள் புறமத வழிபாட்டோடுதான் சம்பந்தப்பட்டிருந்தன, கிறிஸ்தவத்தோடு அல்ல.

8. பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கவும்.

8 இயேசுவின் பிறந்த நாளை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் கொண்டாடியிருக்க மாட்டார்கள் என்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மூடநம்பிக்கையோடு சம்பந்தப்பட்டிருந்தன என்பது ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்திருக்கும். உதாரணமாக, ஒவ்வொரு மனிதனின் பிறப்பின்போதும் ஓர் ஆவி அவன் கூடவே இருக்கும் என்றும் அவனுடைய வாழ்நாள் முழுக்க அது அவனைப் பாதுகாக்கும் என்றும் பூர்வத்திலிருந்த அநேக கிரேக்கரும் ரோமரும் நம்பினார்கள். “எந்தத் தெய்வத்தின் பிறந்த நாளன்று ஒரு நபர் பிறக்கிறாரோ அந்தத் தெய்வத்தோடு இந்த ஆவிக்கு ஒரு மர்ம தொடர்பு இருந்தது” என்று ஒரு புத்தகம் சொல்கிறது. (த லோர் ஆஃப் பர்த்டேஸ்) மூடநம்பிக்கையின் அடிப்படையில் இயேசுவுக்காகக் கொண்டாடப்படுகிற எந்தக் கொண்டாட்டத்திலும் யெகோவா பிரியப்பட மாட்டார் என்பது நிச்சயம். (ஏசாயா 65:11, 12) அப்படியானால், இன்று இத்தனை அநேகர் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார்கள்?

கிறிஸ்மஸின் ஆரம்பம்

9. டிசம்பர் 25, இயேசு பிறந்த தேதியாக எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டது?

9 இயேசு பூமியில் வாழ்ந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் ஜனங்கள் அவருடைய பிறந்த நாளை டிசம்பர் 25 அன்று கொண்டாட ஆரம்பித்தார்கள். ஆனால் அது இயேசு பிறந்த தேதி அல்ல, ஏனெனில் அவர் அக்டோபர் மாதத்தில் பிறந்ததாகவே தெரிகிறது. * அப்படியானால், டிசம்பர் 25 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது? “புறமத ரோமப் பண்டிகையான ‘வெல்லப்படாத சூரியனின் பிறந்த நாளும்’ இயேசுவின் பிறந்த நாளும் ஒரே தேதியில் இருக்க வேண்டும்” என்று “கிறிஸ்தவர்களாக” மாறிய சிலர் பிற்பாடு விரும்பியதால் ஒருவேளை அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். (த நியு என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா) குளிர்காலத்தில் சூரியன் மிகவும் மங்கலாக ஒளிவீசுவதால், அது தன் நீண்டதூரப் பிரயாணங்களிலிருந்து திரும்பி வந்து உஷ்ணத்தையும் வெளிச்சத்தையும் தர வேண்டும் என்பதற்காக புறமத ஜனங்கள் சடங்குகளைச் செய்தார்கள். டிசம்பர் 25-ம் தேதிதான் சூரியன் திரும்பிவர ஆரம்பித்த நாள் என்று கருதப்பட்டது. புறமதத்தினரை மதம் மாற்றுவதற்காக, சில மதத் தலைவர்கள் இந்தப் பண்டிகையை ஏற்றுக்கொண்டு, அதை ஒரு “கிறிஸ்தவ” பண்டிகையாக்குவதற்கு முயன்றார்கள். *

10. அந்தக் காலங்களில், ஏன் சிலர் கிறிஸ்மஸ் கொண்டாடவில்லை?

10 புறமதப் பழக்கவழக்கங்களிலிருந்தே கிறிஸ்மஸ் ஆரம்பமானது என்பது காலங்காலமாக அறியப்பட்ட ஒரு விஷயம். இதன் காரணமாக, 17-⁠ம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும் அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் சிலவற்றிலும் அதற்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கிறிஸ்மஸ் தினத்தன்று யாராவது வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்துவிட்டால்கூட அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. என்றாலும், சீக்கிரத்தில் பழைய வழக்கங்களெல்லாம் மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தன, சில புதிய வழக்கங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. கிறிஸ்மஸ் மீண்டும் ஒரு பிரபலமான பண்டிகையானது, அநேக நாடுகளில் இன்னமும் அது அப்படித்தான் இருக்கிறது. என்றாலும், கிறிஸ்மஸ் பண்டிகை பொய் மதத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால் கடவுளைப் பிரியப்படுத்த விரும்புவோர் அதைக் கொண்டாடுவதில்லை; கிறிஸ்மஸை மட்டுமல்ல, புறமத வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட எந்தப் பண்டிகையையும் அவர்கள் கொண்டாடுவதில்லை. *

பண்டிகைகளின் ஆரம்பம் உண்மையிலேயே முக்கியமா?

11. சிலர் ஏன் பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள், ஆனால் நாம் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

11 கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகள் புறமதப் பழக்கவழக்கங்களிலிருந்தே ஆரம்பமாகியிருக்கின்றன என்பதைச் சிலர் ஒத்துக்கொண்டாலும், அவற்றைக் கொண்டாடுவதில் எந்தத் தவறுமில்லை என நினைக்கிறார்கள். சொல்லப்போனால், பண்டிகைகளைக் கொண்டாடும்போது பெரும்பாலோர் பொய் வணக்கத்தைப் பற்றியெல்லாம் யோசிப்பதில்லை; குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து மகிழ்வதற்கு அத்தகைய தினங்கள் வாய்ப்பளிக்கின்றன என்று மட்டுமே நினைக்கிறார்கள். இப்படித்தான் நீங்களும் நினைக்கிறீர்களா? அப்படியானால், மெய் வணக்கத்தின் பக்கம் உறுதியாய் நிற்க உங்களுக்குத் தடையாக இருப்பது, பொய் மதத்தின் மீது உங்களுக்கிருக்கும் பற்று அல்ல, ஆனால் குடும்பத்தின் மீது உங்களுக்கிருக்கும் பற்றே. உங்களுடைய குடும்ப அங்கத்தினர்களோடு நீங்கள் பாசமாக இருக்க வேண்டுமென குடும்ப ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்த யெகோவா தேவன் விரும்புகிறார் என்பதில் சந்தேகமில்லை. (எபேசியர் 3:14, 15) ஆனால், அத்தகைய பாசப்பிணைப்புகளை அவருக்குப் பிரியமான விதங்களில் நீங்கள் வலுப்படுத்திக் கொள்ளலாம். நாம் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினார்: “கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் [“தொடர்ந்து,” NW] சோதித்துப் பாருங்கள்.”—எபேசியர் 5:10.

சாக்கடையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சாக்லேட்டை நீங்கள் சாப்பிடுவீர்களா?

12. அசுத்தமானதிலிருந்து ஆரம்பமான வழக்கங்களையும் கொண்டாட்டங்களையும் நாம் ஏன் தவிர்க்க வேண்டும் என்பதை உதாரணத்துடன் விளக்கவும்.

12 பண்டிகைகளைக் கொண்டாடும்போது அவற்றின் ஆரம்பத்தைப் பற்றியெல்லாம் இன்று யாரும் நினைப்பதில்லை என ஒருவேளை நீங்கள் சொல்லலாம். அவற்றின் ஆரம்பம் உண்மையிலேயே அவ்வளவு முக்கியமானதா? ஆம்! ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்: சாக்லேட் ஒன்று சாக்கடையில் கிடப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை அங்கிருந்து எடுத்துச் சாப்பிடுவீர்களா? கண்டிப்பாக மாட்டீர்கள்! அந்த சாக்லேட் அசுத்தமாயிருக்கிறது. அந்த சாக்லேட்டைப் போல, இன்று கொண்டாடப்படுகிற பண்டிகைகள் இனிப்பாய் இருப்பதாகத் தோன்றலாம், ஆனால் அவை அசுத்தமான இடங்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, மெய் வணக்கத்தின் பக்கம் நாம் உறுதியாக நிற்க வேண்டுமானால், ‘அசுத்தமானதைத் தொடாதிருக்க’ வேண்டும், அவ்வாறு செய்யும்படியே ஏசாயா தீர்க்கதரிசி மெய் வணக்கத்தாரிடம் சொல்லியிருந்தார்.—ஏசாயா 52:11.

மற்றவர்களோடு தொடர்புகொள்கையில் விவேகம்

13. பண்டிகைகளில் கலந்துகொள்ளாதபோது என்ன சவால்களை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கலாம்?

13 பண்டிகைகளில் கலந்துகொள்ளக் கூடாதென்று தீர்மானமாய் இருக்கும்போது நீங்கள் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கலாம். உதாரணமாக, வேலை செய்யும் இடத்தில் கொண்டாடப்படுகிற சில பண்டிகைகளில் நீங்கள் ஏன் கலந்துகொள்வதே இல்லை என நினைத்து சக வேலையாட்கள் குழம்பலாம். உங்களுக்கு யாராவது கிறிஸ்மஸ் பரிசு ஒன்றைக் கொடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதை வாங்கிக்கொள்வது தவறா? உங்களுடைய மத நம்பிக்கைகளும் உங்கள் மணத்துணையின் நம்பிக்கைகளும் வேறுபட்டால் என்ன செய்வது? பண்டிகைகளைக் கொண்டாடாததால் உங்கள் பிள்ளைகள் ஏங்கிவிடாதபடிப் பார்த்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?

14, 15. ஏதோவொரு பண்டிகையின்போது உங்களுக்கு யாராவது வாழ்த்துதல் சொன்னாலோ உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்பினாலோ நீங்கள் என்ன செய்யலாம்?

14 ஒவ்வொரு சூழ்நிலையையும் எப்படிக் கையாள வேண்டுமெனத் தீர்மானிப்பதில் விவேகம் அவசியம். ஏதோவொரு பண்டிகையின்போது சந்தர்ப்பவசமாக உங்களைச் சந்திக்கும் ஒருவர் வாழ்த்துதல் சொன்னால், நீங்கள் பவ்வியமாக அவருக்கு நன்றி மட்டும் சொல்லிவிட்டு நிறுத்திக்கொள்ளலாம். ஆனால், நீங்கள் அடிக்கடி சந்திக்கிற ஒரு நபரோடு அல்லது சேர்ந்து வேலை செய்கிற ஒரு நபரோடு தொடர்புகொள்ள வேண்டியிருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சூழ்நிலையில், உங்கள் நம்பிக்கைகளைக் குறித்து இன்னுமதிகமாகச் சொல்ல நீங்கள் தீர்மானிக்கலாம். ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பக்குவமாகப் பேசுங்கள். பைபிள் இவ்வாறு புத்திமதி அளிக்கிறது: “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.” (கொலோசெயர் 4:6) மற்றவர்களை அவமதித்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். மாறாக, நீங்கள் எந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறீர்கள் என்பதை நயமாக அவர்களிடம் விளக்குங்கள். பரிசுகள் கொடுப்பதையோ ஒன்றுகூடி மகிழ்வதையோ நீங்கள் எதிர்ப்பதில்லை என்பதையும், வேறொரு சந்தர்ப்பத்தின்போது அவற்றையெல்லாம் செய்வதில் உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்பதையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்.

15 யாராவது உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்பினால் என்ன செய்வது? இது பெருமளவு, சூழ்நிலையைப் பொறுத்தே இருக்கிறது. பரிசு கொடுப்பவர் உங்களிடம் இவ்வாறு சொல்லலாம்: “நீங்கள் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், நீங்கள் இதை வாங்கியே ஆக வேண்டும்.” இத்தகைய சூழ்நிலையில் அந்தப் பரிசை வாங்கிக்கொள்வது அப்பண்டிகையில் கலந்துகொள்வது போல் இருக்காது என ஒருவேளை நீங்கள் தீர்மானிக்கலாம். ஆனால், உங்களுடைய மத நம்பிக்கைகளைப் பற்றி பரிசு கொடுப்பவருக்குத் தெரியாவிட்டால், அந்தப் பண்டிகையை நீங்கள் கொண்டாடுவதில்லை என்று அவரிடம் சொல்லலாம். அப்போதுதான், அந்தத் தினத்தில் நீங்கள் அந்தப் பரிசை வாங்கிக்கொண்டு, கைமாறாக எந்தப் பரிசையும் அவருக்குக் கொடுக்காதிருப்பதன் காரணம் அவருக்குப் புரியும். மறுபட்சத்தில், உங்களுடைய மத நம்பிக்கைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க மாட்டீர்கள் என்பதைக் காட்டுவதற்கோ, ஒரு பரிசுக்காக மத நம்பிக்கைகளையே விட்டுக்கொடுத்து விடுவீர்கள் என்பதைக் காட்டுவதற்கோ ஒருவர் பரிசு கொடுக்கிறார் என்றால், அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாதிருப்பது ஞானமாகும்.

குடும்பத்தாரைப் பற்றியென்ன?

16. பண்டிகைகள் சம்பந்தமாக நீங்கள் எப்படிப் பக்குவமாக நடந்துகொள்ளலாம்?

16 குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களது மத நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருந்தால் என்ன செய்வது? இவர்களிடமும் பக்குவமாக நடந்துகொள்ளுங்கள். உங்கள் சொந்தக்காரர்கள் செய்ய விரும்புகிற ஒவ்வொரு சடங்கையும் கொண்டாட்டத்தையும் குறித்து தர்க்கம் செய்யாதீர்கள். மாறாக, தீர்மானம் செய்வதில் உங்களது உரிமையை அவர்கள் மதிக்க வேண்டுமென நீங்கள் விரும்புவது போலவே அவர்களது உரிமையையும் நீங்கள் மதியுங்கள். (மத்தேயு 7:12) அந்தப் பண்டிகையில் உங்களை ஈடுபடுத்திவிடுகிற எந்தவொரு செயலையும் தவிர்த்திடுங்கள். என்றாலும், அந்தக் கொண்டாட்டத்துடன் நேரடியாகச் சம்பந்தப்படாத விஷயங்களில் கலந்துகொள்ளும்போது நியாயமாக நடந்துகொள்ளுங்கள். அதே சமயத்தில், உங்களுடைய நல்மனசாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதபடி நீங்கள் எப்போதும் நடந்துகொள்ள வேண்டும்.—1 தீமோத்தேயு 1:18, 19.

17. மற்றவர்கள் பண்டிகைகளைக் கொண்டாடுவதைப் பார்க்கும்போது, உங்கள் பிள்ளைகள் ஏங்கிவிடாதிருக்க நீங்கள் என்ன செய்யலாம்?

17 வேதப்பூர்வமற்ற பண்டிகைகளைக் கொண்டாடாமல் இருப்பதால் உங்கள் பிள்ளைகள் ஏங்கிவிடாதபடிப் பார்த்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்? வேறு நாட்களில் பிள்ளைகளுக்கென்று நீங்கள் எதையாவது செய்யலாம். தங்கள் குழந்தைகளுக்கு எந்தெந்த சமயங்களில் பரிசுகள் வழங்கலாம் என்பதைக் குறித்து சில பெற்றோர்கள் முன்கூட்டியே திட்டமிடுகிறார்கள். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசு உங்களுடைய நேரமும் அன்பான கவனிப்பும்தான்.

மெய் வணக்கத்தைக் கடைப்பிடியுங்கள்

மெய் வணக்கத்தைக் கடைப்பிடிப்பது உண்மையான சந்தோஷத்தை அளிக்கிறது

18. கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்வது மெய் வணக்கத்தின் பக்கம் உறுதியாக நிற்பதற்கு உங்களுக்கு எப்படி உதவலாம்?

18 கடவுளை நீங்கள் பிரியப்படுத்த வேண்டுமானால், பொய் வணக்கத்தை விட்டுவிட்டு மெய் வணக்கத்தின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டும். இதில் என்ன உட்பட்டிருக்கிறது? பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும்.” (எபிரெயர் 10:24, 25) கடவுள் ஏற்றுக்கொள்கிற விதத்தில் அவரை வணங்குவதற்குக் கிறிஸ்தவக் கூட்டங்கள் சந்தோஷமான வாய்ப்புகளை அளிக்கின்றன. (சங்கீதம் 22:22; 122:1) அத்தகைய கூட்டங்களில் விசுவாசமிக்க கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் ‘உற்சாகப் பரிமாற்றம்’ செய்துகொள்கிறார்கள்.—ரோமர் 1:12, NW.

19. பைபிளிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் பேசுவது ஏன் முக்கியம்?

19 மெய் வணக்கத்தின் பக்கம் நீங்கள் உறுதியாக நிற்பதற்கு மற்றொரு வழி, யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்கும்போது கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் பேசுவதாகும். இன்று உலகில் நடக்கும் பொல்லாத காரியங்களைக் கண்டு அநேகர் உண்மையிலேயே ‘பெருமூச்சுவிட்டு அழுகிறார்கள்.’ (எசேக்கியேல் 9:4) அவ்வாறு வேதனைப்படும் சிலரை உங்களுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். அப்படிப்பட்டவர்களிடம் பைபிள் அடிப்படையிலான உங்கள் எதிர்கால நம்பிக்கையைக் குறித்து நீங்கள் ஏன் பேசக்கூடாது? ஒருவேளை பொய் மதப் பழக்கவழக்கங்கள் மீதான பற்று உங்கள் மனதில் இன்னும் லேசாக ஒட்டிக்கொண்டிருக்குமானால், உண்மை கிறிஸ்தவர்களோடு சகவாசம் வைத்துக் கொள்கையிலும், நீங்கள் கற்றுக்கொண்ட மகத்தான பைபிள் சத்தியங்களை மற்றவர்களிடம் பேசி வருகையிலும் அவை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துபோவதை நீங்களே காண்பீர்கள். மெய் வணக்கத்தின் பக்கம் இப்படி உறுதியாய் நிற்கும்போது நீங்கள் ரொம்பவும் சந்தோஷப்படுவீர்கள், ஏராளமான ஆசீர்வாதங்களையும் பெறுவீர்கள், இதில் சந்தேகமே இல்லை.—மல்கியா 3:10.

^ பாரா. 9 டிசம்பர் 25-⁠ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, சாட்டர்னேலியா என்ற பண்டிகையும்கூட ஒரு காரணம். ரோமர்களின் வேளாண்மை தெய்வத்தைக் கௌரவிக்கிற இந்தப் பண்டிகை டிசம்பர் 17-24 வரை நடைபெற்றது. விருந்துண்பது, ஆட்டம்பாட்டத்தில் ஈடுபடுவது, பரிசுகள் வழங்குவது ஆகியவை இந்த சாட்டர்னேலியா பண்டிகையின்போது நடைபெற்றன.

^ பாரா. 10 உண்மை கிறிஸ்தவர்கள் பிரபலமான மற்ற பண்டிகைகளை எப்படிக் கருதுகிறார்கள் என்பதைப் பற்றிய கலந்தாலோசிப்புக்கு, பக்கங்கள் 222-3-ல் உள்ள பிற்சேர்க்கையைக் காண்க.