Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இதுதான் கடவுளுடைய நோக்கமா?

இதுதான் கடவுளுடைய நோக்கமா?

எந்த நியூஸ்பேப்பரில் வேண்டுமானாலும் வாசித்துப் பாருங்கள்; அல்லது டிவியில் பாருங்கள்; இல்லையென்றால் ரேடியோவில் கேளுங்கள். குற்றச்செயல், போர், பயங்கரவாதம் போன்றவற்றைப் பற்றித்தான் வாசிப்பீர்கள், பார்ப்பீர்கள், கேட்பீர்கள். இப்போது உங்கள் சொந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒருவேளை வியாதியின் காரணமாகவோ அன்பான ஒருவர் இறந்துபோனதன் காரணமாகவோ நீங்கள் ரொம்பவுமே தவித்துக் கொண்டிருக்கலாம். “வேதனையில் மூழ்கிப் போயிருக்கிறேன்” என்று சொன்ன நல்ல மனிதனான யோபுவைப் போலவே நீங்களும் ஒருவேளை உணரலாம்.​—⁠யோபு 10:15, இன்றைய மொழியில் பரிசுத்த பைபிள் (ஆங்கிலம்).

உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்:

  • நானும் உலகிலுள்ள எல்லாரும் இப்படிக் கஷ்டப்பட வேண்டும் என்பதுதான் கடவுளுடைய நோக்கமா?

  • என்னுடைய பிரச்சினைகளைச் சமாளிக்க யாரிடம் உதவி கேட்பது?

  • என்றைக்காவது ஒரு நாள் இந்த உலகத்தில் சமாதானத்தைப் பார்ப்போமா?

இந்தக் கேள்விகளுக்கு பைபிள் திருப்திகரமான பதில்களை அளிக்கிறது.

இங்கே பாருங்கள், பூமியில் இத்தகைய மாற்றங்களைக் கடவுள் செய்யப்போகிறார் என பைபிள் கற்பிக்கிறது.

  • ‘ஜனங்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.’​—⁠வெளிப்படுத்துதல் 21:4

  • ‘கால் ஊனமுற்றோர் மான் போல் துள்ளிக்குதிப்பர்.’​—⁠ஏசாயா 35:⁠6, பொது மொழிபெயர்ப்பு

  • ‘பார்வையற்றோரின் கண்கள் திறக்கப்படும்.’​—⁠ஏசாயா 35:5, NW

  • “செத்துப்போய் கல்லறையில் இருக்கிறவர்கள் . . . கல்லறையை விட்டு வெளியே வருவார்கள்.”​—⁠யோவான் 5:28, 29, ஈஸி டு ரீட் வர்ஷன்

  • “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” ​—⁠ஏசாயா 33:24

  • ‘வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கும்.’​—⁠சங்கீதம் 72:16, ERV

பைபிள் கற்பிக்கும் விஷயங்களிலிருந்து நன்மை அடையுங்கள்

முந்தின பக்கங்களைப் பார்த்துவிட்டு, ‘இதெல்லாம் எங்கே நடக்கப் போகிறது’ எனச் சட்டென்று முடிவு செய்துவிடாதீர்கள். இவை எல்லாவற்றையும் நிஜமாகவே நடத்திக் காட்டப் போவதாகக் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். அதை அவர் எப்படிச் செய்யப் போகிறாரென்று பைபிள் விளக்குகிறது.

அதுமட்டுமல்ல, இன்னும் பல விதங்களில் பைபிள் நமக்கு நன்மை அளிக்கிறது. இப்போதேகூட, மிகவும் திருப்தியாக வாழ அது வழிகாட்டுகிறது. உங்களுக்கு இருக்கிற கவலைகளையும் பிரச்சினைகளையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒருவேளை நீங்கள் காசு பணம் இல்லாமல் கஷ்டப்படலாம், குடும்பப் பிரச்சினையால் வேதனைப்படலாம், நோயினால் அவதிப்படலாம், அல்லது பிரியமான ஒருவர் இறந்துபோனதை நினைத்து வருத்தப்படலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகளைச் சமாளிக்க பைபிள் இன்று உங்களுக்கு உதவும்; அதுமட்டுமல்ல, பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் மனதிற்கு நிம்மதியையும் கொடுக்கும்:

  • நாம் ஏன் துன்பப்படுகிறோம்?

  • கவலைகளை நாம் எப்படிச் சமாளிக்கலாம்?

  • குடும்ப வாழ்க்கையில் நாம் எப்படி இன்னுமதிக சந்தோஷத்தைக் கண்டடையலாம்?

  • இறந்த பிறகு நமக்கு என்ன நடக்கிறது?

  • இறந்துபோன நம்முடைய பிரியமானவர்களை மறுபடியும் பார்க்க முடியுமா?

  • கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் நாம் எப்படி நிச்சயமாய் இருக்கலாம்?

நீங்கள் இந்தப் புத்தகத்தை வாசிப்பதை வைத்தே, பைபிள் கற்பிக்கிற விஷயங்களைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆசை இருக்கிறது எனச் சொல்லிவிடலாம். அந்த விஷயங்களையெல்லாம் தெரிந்துகொள்ள இப்புத்தகம் உங்களுக்கு உதவும். ஒவ்வொரு பக்கத்திலும் அந்தந்த பாராக்களுக்கான கேள்விகள் கொடுக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். இப்படிக் கேள்வி பதில் முறையில் லட்சக்கணக்கானோர் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளைப் படித்து மகிழ்ந்திருக்கிறார்கள். நீங்களும் அவ்வாறே மகிழ்வீர்கள் என்று நம்புகிறோம். பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்பதைப் படிப்படியாகக் கற்றுக்கொள்ளும்போது மிகுந்த சந்தோஷமடைவீர்கள், திருப்தியான பதில்களையும் பெறுவீர்கள்; அவ்வாறு கற்றுவருகையில் கடவுளுடைய ஆசி உங்களோடு இருப்பதாக!