Skip to content

இயேசு திருமணம் ஆனவரா? அவருக்கு கூடப்பிறந்தவர்கள் இருந்தார்களா?

இயேசு திருமணம் ஆனவரா? அவருக்கு கூடப்பிறந்தவர்கள் இருந்தார்களா?

பைபிள் தரும் பதில்

 இயேசுவின் திருமண நிலையைப் பற்றி பைபிள் திட்டவட்டமாக எதையுமே குறிப்பிடுவதில்லை; என்றாலும், அவருக்குத் திருமணம் ஆகவில்லை என்பதை அது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. a பின்வரும் விஷயங்களைக் கவனியுங்கள்:

  1.   இயேசுவின் குடும்பத்தாரைப் பற்றியும், அவருடைய ஊழியக் காலத்தில் அவரோடு சென்ற பெண்களைப் பற்றியும், அவர் கொல்லப்பட்ட இடத்தில் இருந்த பெண்களைப் பற்றியும் பைபிள் அடிக்கடி குறிப்பிடுகிறது; ஆனால், அவருக்கு ஒரு மனைவி இருந்ததாக எங்கேயுமே குறிப்பிடுவதில்லை. (மத்தேயு 12:46, 47; மாற்கு 3:31, 32; 15:40; லூக்கா 8:2, 3, 19, 20; யோவான் 19:25) அதற்குக் காரணம், இயேசு திருமணமே செய்துகொள்ளவில்லை என்பதுதான்!

  2.   கடவுளுக்கு அதிகமாகச் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பவர்களைப் பற்றி இயேசு தன் சீஷர்களிடம் சொல்லும்போது, “அப்படி [திருமணம் செய்யாமல்] இருக்க முடிந்தவர்கள் அப்படி இருக்கட்டும்” என்றார். (மத்தேயு 19:10-12) கடவுளுக்கு இன்னும் முழுமையாய்த் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பவர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்.—யோவான் 13:15; 1 கொரிந்தியர் 7:32-38.

  3.   இயேசு தன்னுடைய மரணத்திற்குச் சற்றுமுன், தன்னுடைய அம்மாவைக் கவனித்துக்கொள்வதற்கான ஏற்பாட்டைச் செய்தார். (யோவான் 19:25-27) ஒருவேளை இயேசுவுக்கு மனைவி குழந்தைகள் இருந்திருந்தால், அவர்களையும் கவனித்துக்கொள்வதற்குக் கண்டிப்பாக ஏற்பாடு செய்திருப்பார்.

  4.   இயேசுவின் உதாரணத்தைப் பயன்படுத்தி கணவர்களுக்கு பைபிள் அறிவுரை வழங்குகிறது என்றாலும், அவருக்கு ஒரு மனைவி இருந்ததாக அது குறிப்பிடுவதில்லை. “கணவர்களே, சபைக்காகக் கிறிஸ்து தன்னையே கொடுத்து அதன்மீது அன்பு காட்டியதுபோல் நீங்களும் உங்கள் மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள்” என்றுதான் சொல்கிறது. (எபேசியர் 5:25) இயேசுவுக்கு உண்மையிலேயே திருமணமாகியிருந்தால், ஒரு கணவராக அவர் வைத்த பரிபூரண முன்மாதிரியைப் பற்றித்தானே இந்த வசனம் சொல்லியிருக்கும்?

இயேசுவுக்கு கூடப்பிறந்தவர்கள் இருந்தார்களா?

 ஆம், குறைந்தது ஆறு பேர் இருந்தார்கள். யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதாஸ் ஆகிய சகோதரர்களும், குறைந்தது இரண்டு சகோதரிகளும் இருந்தார்கள். (மத்தேயு 13:54-56; மாற்கு 6:3) இவர்கள் இயேசுவின் அம்மா மரியாளுக்கும் அவளுடைய கணவர் யோசேப்புக்கும் பிறந்தவர்கள். (மத்தேயு 1:25) இயேசுவை மரியாளின் ‘மூத்த மகன்’ என்று பைபிள் அழைப்பதால், அவளுக்கு வேறு பிள்ளைகளும் இருந்தார்கள் என்பது தெளிவாகிறது.—லூக்கா 2:7.

இயேசுவின் சகோதரர்களைப் பற்றிய தவறான கருத்துகள்

 மரியாள் காலமெல்லாம் கன்னியாகவே இருந்தாள் என்ற கருத்தை ஆதரிப்பதற்காக, “சகோதரர்கள்” என்ற வார்த்தைக்குச் சிலர் வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு, இயேசுவின் சகோதரர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் யோசேப்பின் முதல் தாரத்திற்குப் பிறந்தவர்கள் என்று சிலர் சொல்கிறார்கள். ஒருவேளை இயேசுவுக்கு முன்பே யோசேப்புக்கு வேறு மகன்கள் இருந்திருந்தால், அவர்களில் மூத்தவன்தான் யோசேப்பின் சட்டப்பூர்வ வாரிசாக ஆகியிருப்பான். ஆனால், தாவீதுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி இயேசுதான் அவருடைய சட்டப்பூர்வ வாரிசாக ஆனார் என்று பைபிள் சொல்கிறது.—2 சாமுவேல் 7:12, 13; லூக்கா 1:32.

 “இயேசுவின் சகோதரர்கள்” என்ற வார்த்தைகள் அவருடைய சீஷர்களை, அதாவது ஆன்மீகச் சகோதரர்களை, குறிப்பதாக இருக்குமா? இந்தக் கருத்து பைபிள் வசனங்களுக்கு முரணாக இருக்கிறது; ஏனென்றால், ஒரு சமயத்தில் ‘அவருடைய சகோதரர்கள் அவர்மேல் விசுவாசம் வைக்கவில்லை’ என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 7:5) இயேசுவின் சகோதரர்களையும் அவருடைய சீஷர்களையும் பைபிள் வேறுபடுத்திக் காட்டுகிறது.—யோவான் 2:12.

 இயேசுவின் சகோதரர்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள் என வேறொரு கோட்பாடு சொல்கிறது. ஆனால், “சகோதரர்,” “சொந்தக்காரர்,” “ஒன்றுவிட்ட சகோதரர்” ஆகியவற்றுக்கு வெவ்வேறு கிரேக்க வார்த்தைகளை பைபிள் பயன்படுத்துகிறது. (லூக்கா 21:16; கொலோசெயர் 4:10) இயேசுவின் சகோதர சகோதரிகள் உண்மையிலேயே அவரோடு கூடப்பிறந்தவர்கள்தான் என்பதை ஏராளமான பைபிள் அறிஞர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, த எக்ஸ்பொஸிட்டர்ஸ் பைபிள் கமென்ட்ரி என்ற புத்தகம் இப்படிச் சொல்கிறது: “‘சகோதரர்கள்’ என்ற வார்த்தை . . . மரியாள் மற்றும் யோசேப்பின் மகன்களையே குறிக்கிறது. அப்படியானால், இயேசுவின் சகோதரர்களை, அதாவது அவருடைய தாய் வழியில் வந்த பிள்ளைகளை, குறிக்கிறது.” b

a உண்மைதான், கிறிஸ்துவை “மணமகன்” என்று பைபிள் அழைக்கிறது, ஆனால் அந்த வார்த்தை அடையாளப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை வசனங்களின் சூழமைவு தெளிவுபடுத்துகிறது.—யோவான் 3:28, 29; 2 கொரிந்தியர் 11:2.

b வின்சன்ட் டேய்லர் எழுதிய த காஸ்பல் அக்கார்டிங் டு செ. மார்க், இரண்டாவது பதிப்பில் பக்கம் 249-ஐயும், ஜான் பி. மிய்யெர் எழுதிய எ மார்ஜினல் ஜ்யு—ரீதிங்க்கிங் த ஹிஸ்டாரிக்கல் ஜீஸஸ், தொகுப்பு 1, பக்கங்கள் 331-332-ஐயும் பாருங்கள்.