Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | உலக அழிவு சீக்கிரத்தில்!

“உலக அழிவு” என்றால்...

“உலக அழிவு” என்றால்...

‘இந்த உலகம் சீக்கிரமா அழியப்போகுது’ என்று கேட்டவுடனே உங்களுக்கு என்ன தோன்றுகிறது? வானத்திலிருந்து ஒரு பெரிய விண்கல் வந்து பூமிமேல் மோதி, பூமியில் இருக்கிற எல்லாவற்றையும் அழித்துவிடும் என்று நினைக்கிறீர்களா? அல்லது ஏதோ ஒரு இயற்கை பேரழிவு ஏற்பட்டு பூமி முழுவதும் அழிந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? சிலர் இதையெல்லாம் யோசித்துக் கவலைப்படுகிறார்கள்; சிலர் இதெல்லாம் நடக்குமா என்று சந்தேகப்படுகிறார்கள். இன்னும் சிலர் ‘உலகம் அழிந்துவிடும்’ என்று சொல்கிறவர்களை பார்த்து கிண்டல் செய்கிறார்கள்.

உலகத்திற்கு “முடிவு வரும்” என்று பைபிள் தெளிவாக சொல்கிறது. (மத்தேயு 24:14) அதை “அர்மகெதோன்” என்றும், ‘கடவுளுடைய மகா நாள்’ என்றும் பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 16:14, 16) இன்று இருக்கும் மதங்கள் உலக அழிவைப் பற்றி தெளிவான கருத்துக்களை மக்களுக்கு சொல்வதில்லை. அதுமட்டுமல்ல அழிவைப் பற்றிய பயமுறுத்தும் கதைகள் உலகம் முழுவதும் பரவி இருக்கின்றன. ஆனால், உலக அழிவு என்றால் என்னவென்று பைபிள் தெளிவாக சொல்கிறது. அது எப்போது வரும், அந்த அழிவில் இருந்து தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்கிறது. முதலில், உலக அழிவைப் பற்றி மக்கள் மத்தியில் என்ன தவறான கருத்துகள் இருக்கிறது, அதை சரியாக புரிந்துகொள்வதற்கு பைபிள் எப்படி உதவுகிறது என்று இப்போது பார்க்கலாம்.

அழிவைப் பற்றிய தவறான கருத்துகள்

  1. “பூமி எரிஞ்சு சாம்பலாகிடும்”

    “தேவனே, நீர் பூமியை அதன் அஸ்திபாரங்களின் மீது ஸ்தாபித்தீர். எனவே அது ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 104:5, ஈஸி டு ரீட் வர்ஷன்) கடவுள் ஒருபோதும் பூமியை அழிக்கமாட்டார், அதை அழிக்க யாரையும் அனுமதிக்கவும் மாட்டார் என்று இந்த வசனமும் மற்ற வசனங்களும் நமக்கு நம்பிக்கை கொடுக்கின்றன!—பிரசங்கி 1:4; ஏசாயா 45:18.

  2. “உலக அழிவு தற்செயலாதான் நடக்கும்”

    உலகம் அழியப்போகிற “நாளோ அந்த மணிநேரமோ பரலோகத் தகப்பனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது, பரலோகத்திலுள்ள தேவதூதர்களுக்கும் தெரியாது, மகனுக்கும் தெரியாது. இதெல்லாம் நடக்கப்போகிற காலம் உங்களுக்குத் தெரியாததால் எச்சரிக்கையுடன் இருங்கள், விழிப்புடன் இருங்கள்” என்று இயேசு சொன்னார். (மாற்கு 13:32, 33) எனவே, இந்த உலகத்தின் அழிவு தற்செயலாக நடக்கும் சம்பவம் அல்ல. அதை எப்போது கொண்டு வர வேண்டும் என்று கடவுள் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளார். அழிவு வரப்போகிற சரியான நேரமும் தேதியும் கடவுளுக்கு (‘பரலோகத் தகப்பனுக்கு’) மட்டும்தான் தெரியும்.

  3. “மனுஷங்களே பூமியை அழிச்சிடுவாங்க, இல்லனா விண்கற்கள் மோதி பூமி அழிஞ்சுடும்”

    உலகம் எப்படி அழியும் என பைபிள் சொல்கிறது: “பரலோகம் திறந்திருப்பதைப் பார்த்தேன்; இதோ! ஒரு வெள்ளைக் குதிரை காணப்பட்டது. அதன்மேல் உட்கார்ந்திருந்தவர், உண்மையுள்ளவர் என்றும் சத்தியமுள்ளவர் என்றும் அழைக்கப்படுகிறவர்; . . . குதிரைமீது உட்கார்ந்திருந்தவரோடும் அவருடைய படைவீரர்களோடும் போரிடுவதற்காக, மூர்க்க மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய படைவீரர்களும் கூடிவந்ததைப் பார்த்தேன்” என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 19:11-21) இந்த வசனங்களில் இருந்து ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது: கடவுள் தன்னுடைய ‘படைவீரர்களை’ (அதாவது தேவ தூதர்களை) பயன்படுத்தி, தன்னுடைய எதிரிகளை எல்லாம் அழிப்பார்.

] பைபிள் சொல்கிற உலக அழிவு நம்மை பயமுறுத்தும் செய்தி அல்ல, நமக்கு அதிக சந்தோஷத்தை தருகிற செய்தி.

அழிவைப் பற்றிய உண்மைகள்

  1. அரசாங்கங்கள் அழிக்கப்படும்.

    “அந்த அரசர்களின் காலத்தில் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது; அதன் ஆட்சியுரிமை வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது. அது மற்ற அரசுகளை எல்லாம் நொறுக்கி அவற்றிற்கு முடிவு கட்டும்; அதுவோ என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (தானியேல் 2:44, பொது மொழிபெயர்ப்பு) ஏற்கனவே நாம் பார்த்தபடி ‘குதிரைமீது உட்கார்ந்திருந்தவரும் அவருடைய படைவீரர்களும்’ ‘பூமியின் ராஜாக்களையும் அவர்களுடைய படைவீரர்களையும்’ அழித்துப்போடுவார்கள்.—வெளிப்படுத்துதல் 19:19.

  2. போர், வன்முறை, அநியாயம் நடப்பதற்கு காரணமாக இருக்கிற மக்கள் அழிக்கப்படுவார்கள்.

    “[கடவுள்] பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்.” (சங்கீதம் 46:9) “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 2:21, 22) “இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்” என்று கடவுள் சொல்கிறார்.—வெளிப்படுத்துதல் 21:4, 5.

  3. கடவுள் சொல்வதை செய்யாத... மக்களை ஏமாற்றுகிற... மதங்கள் அழிக்கப்படும்.

    “தீர்க்கதரிசிகள், பொய்களை கூறுகிறார்கள். ஆசாரியர்கள் (அதாவது குருக்கள்) எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அச்செயல்களைச் செய்வதில்லை. . . . ஆனால், உங்கள் தண்டனை வரும்போது என்ன செய்யப்போகிறீர்கள்?” (எரேமியா 5:31, ஈஸி டு ரீட் வர்ஷன்) “அந்நாளில் பலர் என்னிடம், ‘கர்த்தாவே, கர்த்தாவே, உங்கள் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா, உங்கள் பெயரில் பேய்களைத் துரத்தினோம் அல்லவா, உங்கள் பெயரில் எத்தனையோ அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?’ என்பார்கள்; ஆனால் நான் அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது! அக்கிரமக்காரர்களே, என்னைவிட்டுப் போய்விடுங்கள்’ என்று வெளிப்படையாகச் சொல்வேன்.”—மத்தேயு 7:21-23.

  4. கெட்ட காரியங்களுக்கு காரணமாக இருக்கிற, அதற்கு துணை போகிற மக்கள் அழிக்கப்படுவார்கள்

    “நியாயத்தீர்ப்புக்கு அடிப்படையாக இருப்பது இதுவே: இந்த உலகத்திற்கு ஒளி வந்திருக்கிறது; ஆனாலும், மக்களுடைய செயல்கள் பொல்லாதவையாக இருப்பதால் ஒளிக்குப் பதிலாக இருளையே அவர்கள் நேசிக்கிறார்கள்” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். (யோவான் 3:19) நோவா என்ற கடவுள் பக்தியுள்ள மனிதர் வாழ்ந்த காலத்திலும் உலகம் முழுவதும் ஒரு அழிவு வந்தது. அந்த அழிவைப் பற்றி பைபிள் இப்படி சொல்கிறது: “அப்போது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தில் அழிந்தது . . . இப்போது இருக்கிற வானமும் பூமியும் அதே வார்த்தையினால் நெருப்புக்கென்று வைக்கப்பட்டிருக்கின்றன, தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகிற நாளுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கின்றன.”—2 பேதுரு 3:5-7.

எதிர்காலத்தில் நடக்கப்போகிற அழிவு, நோவா வாழ்ந்த நாட்களில் நடந்த “உலக” அழிவைப் போலவே இருக்கும் என்று பைபிள் சொல்வதை கவனித்தீர்களா? அந்த சமயத்தில் பூமி அழிக்கப்பட்டதா? இல்லை. கடவுளுடைய எதிரிகள், அதாவது “தேவபக்தி இல்லாத” மக்கள்தான் அழிக்கப்பட்டார்கள். நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் கடவுளுடைய நண்பர்களாக இருந்தார்கள், அவர்கள்தான் காப்பாற்றப்பட்டார்கள். அதேபோல், வரப்போகிற அழிவிலும் கடவுளுடைய எதிரிகள்தான் அழிக்கப்படுவார்கள்; கடவுளுடைய நண்பர்கள் உயிரோடு காப்பாற்றப்படுவார்கள்.—மத்தேயு 24:37-42.

கெட்ட ஜனங்களே இல்லையென்றால் இந்த உலகம் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்படியென்றால், பைபிள் சொல்கிற உலக அழிவு நம்மை பயமுறுத்தும் செய்தி அல்ல; நமக்கு அதிக சந்தோஷத்தை தருகிற செய்தி. இருந்தாலும் சில விஷயங்களைப் பற்றி நீங்கள் யோசிக்கலாம்: ‘இந்த அழிவு எப்போது வரும்? அது சீக்கிரம் வருமா? அழிவிலிருந்து தப்பிக்க நான் என்ன செய்ய வேண்டும்? (w15-E 05/01)