Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

செக்ஸ் தாக்குதலைப் பற்றி நான் என்ன தெரிந்துவைத்திருக்க வேண்டும்?—பகுதி 2: மீண்டு வருவது

செக்ஸ் தாக்குதலைப் பற்றி நான் என்ன தெரிந்துவைத்திருக்க வேண்டும்?—பகுதி 2: மீண்டு வருவது

 குற்றவுணர்ச்சியைச் சமாளிப்பது

செக்ஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நிறைய பேர் தங்களுக்கு நடந்ததை அவமானமாக நினைக்கிறார்கள். இப்படி நடந்ததற்கு தாங்கள்தான் காரணம் என்று நினைக்கிறார்கள். 19 வயது கேரனை எடுத்துக்கொள்ளுங்கள். 6-ல் இருந்து 13 வயதுவரை செக்ஸ் தாக்குதலால் அவள் பாதிக்கப்பட்டாள். அவள் இப்படி சொல்கிறாள், “இதுல ரொம்ப மோசமான விஷயம் என்னனா, குற்றவுணர்ச்சியால தவிக்கிறதுதான். இவ்ளோ நாள் இப்படி நடக்கிறதுக்கு நான் எப்படி விட்டேன்னு இப்போகூட என் மனசு அடிச்சிக்கும்.”

உங்கள் சூழ்நிலையைப் பற்றி நீங்களும் அப்படி உணர்ந்தால், பின்வரும் விஷயங்களைக் கவனியுங்கள்:

  • குழந்தைகள் உடலளவிலோ மனதளவிலோ செக்ஸ் வைத்துக்கொள்ள தயாராக இருக்க மாட்டார்கள். இதுபோன்ற செயல்கள் எதை அர்த்தப்படுத்தும் என்பதும் அவர்களுக்கு தெரியாது. இப்படி செய்வதை அனுமதிப்பதா வேண்டாமா என்றும் அவர்களுக்கு தெரியாது. அதனால், குழந்தை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருந்தால் அது அந்த குழந்தையின் தவறு கிடையாது.

  • குழந்தைகள் இயல்பாகவே பெரியவர்களை நம்புவார்கள். அதனால், தவறாக நடந்துகொள்பவர்களுடைய தந்திரம் புரியாமல் அவர்களிடம் அப்பாவித்தனமாக பழகுவார்கள். இது அவர்களைப் பெரிய ஆபத்தில் கொண்டுபோய்விடும். “பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் பொய்யைக்கூட உண்மைபோல் சொல்வார்கள். அவர்களுடைய தந்திர வலையில் குழந்தைகள் எளிதில் சிக்கிக்கொள்வார்கள்” என்று த ரைட் டு இன்னசன்ஸ் என்ற புத்தகம் சொல்கிறது.

  • குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்போது அவர்களுடைய பால் உணர்ச்சிகள் தூண்டிவிடப்படலாம். ஒருவேளை இப்படி உங்களுக்கு நடந்திருந்தால், பயப்படாதீர்கள்; வித்தியாசமான விதத்தில் உங்களைத் தொடும்போது உங்கள் உடல் தானாகவே பிரதிபலிக்கும் விதம்தான் அது. இப்படி நடந்ததற்கு நீங்கள் காரணமும் இல்லை, உங்கள் விருப்பத்தோடுதான் இப்படி நடந்தது என்று நீங்கள் நினைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஆலோசனை: நீங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது உங்களுக்கு என்ன வயது இருந்ததோ, அதே வயதில் இப்போது இருக்கும் ஒரு குழந்தையைப் பற்றி யோசித்து பாருங்கள். உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: “பாலியல் வன்கொடுமையால பாதிக்கப்பட்டதுக்கு அந்த குழந்தைதான் காரணம்னு சொல்ல முடியுமா?”

மூன்று குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் வேலையைச் செய்தபோது கேரன் இந்த உண்மையைப் புரிந்துகொண்டாள். அதில் ஒரு குழந்தைக்குக் கிட்டத்தட்ட ஆறு வயது. அதாவது, கேரனுக்கு பாலியல் வன்கொடுமை நடக்க ஆரம்பித்த வயது. “அந்த வயசுல இருக்கிற ஒரு குழந்தைக்குப் பாதுகாப்பே இல்லனு எனக்கு புரிஞ்சுது. நானும் அப்படித்தானே 6 வயசுல இருந்தேன்” என்று கேரன் சொல்கிறார்.

உண்மை: பாலியல் வன்கொடுமை செய்தவர்தான் இதற்கு முழுக் காரணம். பைபிள் இப்படி சொல்கிறது: “அவரவர் செய்கிற கெட்ட காரியங்களுக்கு அவரவருக்குத்தான் [தவறு செய்தவருக்குத்தான்] தண்டனை கிடைக்கும்.”—எசேக்கியேல் 18:20.

 மனம்விட்டு பேசுவதால் கிடைக்கும் நன்மை

நம்பிக்கைக்குரிய வயதில் முதிர்ந்த ஒருவரிடம் உங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையைப் பற்றிச் சொல்லுங்கள். அப்போது உங்களுக்கு மனஅமைதி கிடைக்கும். பைபிள் இப்படி சொல்கிறது: “உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17.

ஒருவேளை உங்களுக்கு நடந்ததைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்தால்தான் பாதுகாப்பு என்று நீங்கள் நினைப்பது நியாயம்தான். அப்படி அமைதியாக இருந்தால், உங்களுக்குக் கூடுதலாக எந்த மனக்காயமும் ஏற்படாது என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். அது உங்களைப் பாதுகாக்கும் சுவர் போலத் தெரியலாம். அதே அமைதி என்ற சுவர் மற்றவர்களிடம் உதவி கேட்பதிலிருந்து உங்களைத் தடுத்துவிடும்.

அமைதியாக இருப்பது மனக்காயங்களை மறைக்கும் சுவர் என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால் அதே சுவர் மற்றவர்களிடம் உதவி கேட்பதிலிருந்து உங்களைத் தடுத்துவிடும்

ஜேனட் என்ற பெண் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமையைப் பற்றி பேசியது தனக்கு மனநிம்மதியைத் தந்தது என்று சொல்கிறார். “ரொம்ப சின்ன வயசுலயே நான் பாலியல் வன்கொடுமையால பாதிக்கப்பட்டேன். எனக்கு நல்லா தெரிஞ்ச, நான் நம்புன ஒருத்தராலயே பாதிக்கப்பட்டேன். ஆனா அத மனசுகுள்ளயே ரொம்ப நாளா பூட்டி வைச்சிருந்தேன். ஒருநாள் என் அம்மாகிட்ட இதபத்தி பேசுனப்போ, என மனசுல இருக்கிற பெரிய பாரத்த இறக்கி வைச்ச மாதிரி இருந்துச்சு” என்று ஜேனட் சொல்கிறார்.

நடந்ததை யோசித்து பார்த்தால், சிலர் இதைப் பற்றி பேச தயங்குவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது என்று ஜேனட் சொல்கிறார். “பாலியல் வன்கொடுமைய பத்தி பேசுறது ரொம்ப சங்கடமா இருக்கும்” என்று அவர் சொல்கிறார். “என்னோட விஷயத்த பொருத்த வரைக்கும், மனசுகுள்ளயே இத பூட்டி வைச்சது, என்னை ரொம்ப காயப்படுத்துச்சு. அதனால எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் இதபத்தி மத்தவங்ககிட்ட சொல்றது நல்லதுனு நினைக்கிறேன்” என்றும் அவர் சொல்கிறார்.

 ‘குணமாவதற்கு ஒரு நேரம் இருக்கிறது’

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதால், உங்களைக் காயப்படுத்துகிற நிறைய தவறான எண்ணங்கள் உங்களுக்கு வரலாம். உதாரணத்துக்கு, எதற்கும் லாயக்கில்லாதவர், கறைப்படுத்தப்பட்டவர் அல்லது மற்றவர்களுடைய செக்ஸ் இன்பத்திற்காகதான் நீங்கள் இருக்கிறீர்கள் என்றெல்லாம் நினைக்கலாம். இதுபோன்ற அப்பட்டமான பொய்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ‘குணமாவதற்கு இருக்கிற இந்த நேரத்தை’ பயன்படுத்திகொள்ளுங்கள். (பிரசங்கி 3:3) இப்படி செய்வதற்கு எந்தெந்த விஷயங்கள் உங்களுக்கு உதவும்?

பைபிள் படிப்பது. கடவுளுடைய எண்ணங்கள் பைபிளில் இருக்கின்றன. ‘ஆழமாக வேரூன்றியவற்றைத் தகர்த்தெறிகிற சக்தி அதற்கு இருக்கிறது.’ அதனால், நீங்கள் லாயக்கில்லாதவர் என்ற தவறான எண்ணத்தையும் தகர்த்தெறிகிற சக்தி அதற்கு இருக்கிறது. (2 கொரிந்தியர் 10:4, 5) உதாரணத்துக்கு, பின்வரும் வசனங்களைப் படித்து அதை யோசித்து பாருங்கள்: ஏசாயா 41:10; எரேமியா 31:3; மல்கியா 3:16, 17; லூக்கா 12:6, 7; 1 யோவான் 3:19, 20.

ஜெபம். நீங்கள் தனிமரம் கிடையாது! அதனால், எதற்கும் லாயக்கில்லை என்ற உணர்ச்சியோ குற்றவுணர்ச்சியோ உங்களை வாட்டி வதைக்கும்போது ஜெபம் செய்வதன் மூலம் ‘யெகோவாமேல் உங்கள் பாரத்தைப் போட்டுவிடுங்கள்.’—சங்கீதம் 55:22

சபை மூப்பர்கள். இந்த கிறிஸ்தவ சகோதரர்கள் ‘காற்றுக்கு ஒதுங்கும் இடத்தைப் போல இருப்பதற்கும், புயலிலிருந்து பாதுகாக்கும் புகலிடத்தைப் போல இருப்பதற்கும்’ பயிற்சி பெற்றிருக்கிறார்கள். (ஏசாயா 32:2) உங்களைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தை நீங்கள் வளர்த்துக்கொள்வதற்கும், நம்பிக்கையோடு வாழ்வதற்கும் மூப்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

நல்ல நண்பர்கள். கிறிஸ்தவர்களாக வாழும் முன்மாதிரியுள்ள ஆண்களையும் பெண்களையும் கவனியுங்கள். அவர்கள் ஒவ்வொரிடமும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று பாருங்கள். காலப்போக்கில், எல்லாருமே தாங்கள் அன்பு காட்டும் ஆட்களிடம் தவறாக நடந்துகொள்வதில்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்வீர்கள்.

டானியா என்ற இளம் பெண் ஒரு முக்கியமானப் பாடத்தைக் கற்றுக்கொள்கிறாள். சிறு வயதிலிருந்தே, நிறைய ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். “யார நம்பி நெருங்கி பழகுனேனோ அவங்களாலதான் நான் பாதிக்கபட்டேன்” என்று அவள் சொல்கிறாள். ஆனால் போகப்போக, உண்மையான அன்பைக் காட்டுகிற ஆண்கள் இருக்கிறார்கள் என்பதை டானியா புரிந்துகொண்டாள். இதை எப்படிப் புரிந்துகொண்டாள்?

கிறிஸ்தவ வாழ்க்கையில் முன்மாதிரிகளாக இருந்த ஒரு தம்பதியோடு அவள் பழகினாள். அதன் பிறகு, டானியாவின் கண்ணோட்டம் மாறியது. அந்த கணவர் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்தபோது, “எல்லா ஆண்களும் தவறாக நடந்துகொள்கிறவர்கள் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன்” என்று அவள் சொல்கிறாள். “அந்த கணவர் தன்னுடைய மனைவியைப் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டார், அப்படி இருக்க வேண்டும் என்றுதான் கடவுளும் ஆசைப்படுகிறார்.” *எபேசியர் 5:28, 29.

^ பாரா. 27 தீராத மனச்சோர்வு, சாப்பிடும் பழக்கத்தில் பிரச்சினை, தன் உடலை தானே காயப்படுத்திக்கொள்வது, போதைப் பொருள்களுக்கு அடிமையாவது, தூங்குவதில் பிரச்சினை அல்லது தற்கொலை எண்ணங்கள் உங்களுக்கு இருந்தால் ஒரு நல்ல மருத்துவரை போய் பார்ப்பது ஞானமானது.