Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

நான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா?—பாகம் 3: ஞானஸ்நானம் எடுக்க நான் ஏன் தயங்குகிறேன்?

நான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா?—பாகம் 3: ஞானஸ்நானம் எடுக்க நான் ஏன் தயங்குகிறேன்?

 யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பதை நினைத்தாலே உங்களுக்குப் பயமாக இருக்கிறதா? அப்படியென்றால், உங்களுடைய பயத்தைச் சமாளிக்க இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்.

இந்தக் கட்டுரையில்

 ஞானஸ்நானம் எடுத்த பின்பு நான் ஒருவேளை ஒரு பெரிய தப்பு செய்துவிட்டால்...

 நீங்கள் ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்: உங்களுக்குத் தெரிந்த ஒருவர் பெரிய தப்பு செய்ததால் சபையிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம். (1 கொரிந்தியர் 5:11-13) அது உங்களுக்கும் நடந்துவிடுமோ என்று நீங்கள் ஒருவேளை பயப்படலாம்.

 “ஞானஸ்நானத்தைப் பற்றி யோசித்தாலே, அதை எடுத்த பின்பு நான் ஏதாவது பெரிய தப்பு பண்ணிவிடுவேனோ என்ற ஒரு பயம் எனக்குள்ளே வந்துகொண்டே இருக்கும். அப்படி நடந்தால் என்னுடைய அப்பா-அம்மா எவ்வளவு சங்கடப்படுவார்கள் என்று யோசித்துப் பார்ப்பேன்.”—ரெபேக்கா.

 முக்கிய வசனம்: ‘கெட்டவர்கள் கெட்ட வழிகளை . . . விட்டுவிட்டு, நம் கடவுளான யெகோவாவிடம் திரும்பி வரட்டும். அவர் இரக்கம் காட்டி அவர்களைத் தாராளமாக மன்னிப்பார்.’—ஏசாயா 55:7.

 இப்படி யோசித்துப் பாருங்கள்: தப்பு செய்துவிட்டு மனம் திருந்தாத நபர்கள்தான் சபையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். ஆனால், ஒருவேளை மனம் திருந்தி தப்பை சரி செய்துவிட்டால் யெகோவா அவர்கள்மேல் இரக்கம் காட்டுவார், அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வார்.—சங்கீதம் 103:13, 14; 2 கொரிந்தியர் 7:11.

 ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள்: தப்பு செய்கிற இயல்பு உங்களுக்கு இருந்தாலும் அதை செய்வதற்கான தூண்டுதல் வரும்போது யெகோவாவின் உதவியோடு அதை உங்களால் எதிர்த்து நிற்க முடியும். (1 கொரிந்தியர் 10:13) சரி... நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று யார் முடிவு செய்ய வேண்டும், நீங்களா? அல்லது மற்றவர்களா?

 “ஞானஸ்நானத்துக்குப் பின்பு ஒரு பெரிய தப்பு பண்ணி விடுவேனோ என்று நான் பயந்தேன். ஆனால், ஞானஸ்நானம் எடுப்பதை தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பதும் ஒரு பெரிய தப்புதான் என்பதை நான் புரிந்துகொண்டேன். நாளைக்கு என்ன நடக்குமோ என்று பயந்துகொண்டே இருந்தால் இன்றைக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்ய முடியாமல் போய்விடும்.”—கேரன்.

 சுருக்கமாகச் சொன்னால்: யெகோவாவை வணங்குகிற நிறைய பேர் பெரிய தவறுகள் செய்வது கிடையாது. உங்களாலும் அப்படி இருக்க முடியும், நீங்கள் மனது வைத்தால்!—பிலிப்பியர் 2:12.

 அதிகம் தெரிந்துகொள்ள:தப்பு செய்வதற்கான ஆசையை நான் எப்படிக் கட்டுப்படுத்துவது?” என்ற தலைப்பில் பாருங்கள்.

 ஞானஸ்நானம் எடுத்த பின்பு யெகோவாவுக்கு நிறைய செய்ய வேண்டியிருக்குமோ...

 நீங்கள் ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்: ஒருவேளை உங்களுக்கு தெரிந்த சில இளைஞர்கள் யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்வதற்காக குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டுவிட்டு ரொம்ப தூரம் போயிருக்கிறார்கள். உங்களிடமும் அதைத்தான் மற்றவர்கள் எதிர்பார்ப்பார்களோ என்று நீங்கள் பயப்படலாம்.

 “ஒருவர் ஞானஸ்நானம் எடுக்கும்போது யெகோவாவுக்கு அதிகம் செய்வதற்கான கதவுகள் திறந்திருக்கும். அதில் போவதற்கு நிறைய பேர் தயாராக இல்லை. ஒரு சிலருக்கு சூழ்நிலையும் அதற்கு ஏற்ற மாதிரி இல்லை.”—மேரி.

 முக்கிய வசனம்: “ஒவ்வொருவனும் தன்னுடைய செயல்களை ஆராய்ந்து பார்க்கட்டும். அப்போது, அவன் மற்றவனோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷப்படாமல் தன்னைப் பார்த்தே சந்தோஷப்படுவான்.”—கலாத்தியர் 6:4.

 இப்படி யோசித்துப் பாருங்கள்: உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அதற்குப் பதிலாக, மாற்கு 12:30-ல் சொல்லப்பட்டிருப்பதை யோசித்துப் பாருங்கள்: ‘உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் உங்கள் முழு இதயத்தோடு அன்பு காட்ட வேண்டும்.’

 இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: நீங்கள் யெகோவாவை உங்களுடைய முழு இதயத்தோடுதான் சேவை செய்ய வேண்டும். மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக அல்ல. நீங்கள் யெகோவாவை உண்மையாக நேசித்தால், உங்களுடைய பெஸ்டை கொடுப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யோசிப்பீர்கள்.

 “ஞானஸ்நானம் எடுப்பது ஒரு முக்கியமான தீர்மானம்தான். அது உங்கள் தலைமேல் ஒரு பாரத்தை தூக்கி வைத்த மாதிரி ஆகிவிடாது. உங்களை சுற்றி நல்ல நண்பர்கள் இருந்தால் அதனால் வருகிற பொறுப்பை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு உதவி செய்வார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பொறுப்பு எடுத்துக்கொள்ள நீங்களும் பழகிவிட்டால் அது உங்களுக்கு அதிக சந்தோஷத்தைத்தான் கொடுக்கும். ஆனால், ஞானஸ்நானம் எடுப்பதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தால் உங்களுக்கு நீங்களே குழிவெட்டிக் கொள்கிறீர்கள்.”—ஜூலியா.

 சுருக்கமாகச் சொன்னால்: யெகோவா உங்கள்மேல் ரொம்ப அன்பு காட்டியிருக்கிறார். அதைப் பற்றி யோசிக்க யோசிக்க அவர்மேல் நன்றியுணர்வு அதிகமாகும். இது அவருக்கு உங்களுடைய பெஸ்டை கொடுக்க உங்களைத் தூண்டும்.—1 யோவான் 4:19.

 அதிகம் தெரிந்துகொள்ள:நான் பொறுப்பாக நடந்துகொள்கிறேனா?” என்ற தலைப்பில் பாருங்கள்.

 யெகோவாவுக்கு சேவை செய்ய எனக்கு லாயக்கில்லையோ...

 நீங்கள் ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்: யெகோவா இந்த பிரபஞ்சத்தின் பேரரசர். அவரோடு ஒப்பிடும்போது மனிதர்கள் எல்லாம் ஒன்றுமே கிடையாது. ‘நான் ஒருவன்/ஒருத்தி இருப்பது அவருக்கு தெரியுமா?’ என்று நீங்கள் யோசிக்கலாம்.

 “என்னுடைய அப்பா-அம்மா யெகோவாவின் சாட்சிகளாக இருப்பதால்தான் கடவுள் என்னிடம் ஃப்ரெண்டாக இருக்கிறாரோ என்று நான் யோசித்தேன். அதுமட்டுமல்ல, யெகோவா என்னை அவர் பக்கம் இழுக்கவில்லையே என்பதை நினைத்து நான் கவலைப்பட்டேன்.”—நட்டாலி.

 முக்கிய வசனம்: “என்னை அனுப்பிய தகப்பன் ஒருவனை ஈர்க்காவிட்டால் அவன் என்னிடம் வர முடியாது.”—யோவான் 6:44.

 இப்படி யோசித்துப் பாருங்கள்: நீங்கள் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று நினைப்பதே, யெகோவா உங்களுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட் ஆவதற்காக உங்களை அவர் பக்கம் இழுத்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இப்படி அவரே நெருங்கிவரும்போது நீங்கள் தயங்கித் தயங்கி நிற்கலாமா?

 இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: எப்படிப்பட்ட நபர்களை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது யெகோவாதான். நீங்களோ, வேறு யாரோ கிடையாது. அவருடைய வார்த்தை இப்படி நம்பிக்கை தருகிறது: “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”யாக்கோபு 4:8.

 “நீங்கள் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டது... நீங்கள் அவரிடம் நெருங்கிப் போனது... இது எல்லாமே அவர் உங்கள்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது. அதனால் நீங்கள் லாயக்கில்லை என்று உங்கள் மனம் சொன்னாலும் யெகோவா அப்படி நினைப்பதில்லை என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் மட்டுமல்ல, எந்த விஷயத்திலுமே கடவுள் நினைப்பதுதான் எப்போதுமே சரியாக இருக்கும்.”—செலினா.

 சுருக்கமாகச் சொன்னால்: ஞானஸ்நானம் எடுக்க உங்களுக்குத் தகுதி இருக்கிறது என்றால் யெகோவாவை வணங்குவதற்கும் உங்களுக்குத் தகுதி இருக்கிறது என்றுதான் அர்த்தம். யெகோவா உங்களுடைய வணக்கத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர், இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.—வெளிப்படுத்துதல் 4:11.

 அதிகம் தெரிந்துகொள்ள:நான் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?” என்ற தலைப்பில் பாருங்கள்.