Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

நான் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?

நான் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?

 அமெரிக்காவில் உள்ள பருவ வயதினரில் 80 சதவீதம் பேர் ஜெபம் செய்தாலும், அவர்களில் பாதிப் பேர்தான் தினமும் ஜெபம் செய்கிறார்கள் என்பதை ஒரு வாக்கெடுப்பு காட்டுகிறது. ‘வெறும் மன நிம்மதிக்காக செய்றதுதான் ஜெபமா? இல்ல, அதுல வேற முக்கியமான விஷயம் ஏதாவது இருக்கா?’ என்று அவர்களில் சிலர் ஒருவேளை யோசிக்கலாம்.

 ஜெபம் என்பது என்ன?

 எல்லாவற்றையும் படைத்த படைப்பாளரிடம் பேசுகிற பேச்சுதான் ஜெபம். இது எவ்வளவு பெரிய பாக்கியம்! மனிதர்களைவிட யெகோவா எல்லா விதத்திலும் உயர்ந்தவராக இருக்கிறார். ஆனாலும் ‘அவர் நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லை.’ (அப்போஸ்தலர் 17:27) சொல்லப்போனால், பைபிளில் இந்த அருமையான அழைப்பு இருக்கிறது: “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”—யாக்கோபு 4:8.

 கடவுளிடம் எப்படி நெருங்கிப் வருவது?

  •   ஒரு வழி—ஜெபம் செய்வது; இப்படித்தான், நீங்கள் கடவுளிடம் பேசுகிறீர்கள்.

  •   மற்றொரு வழி—பைபிளைப் படிப்பது; இப்படித்தான், கடவுள் உங்களிடம் “பேசுகிறார்.”

 இப்படி உங்களுக்கும் கடவுளுக்கும் இடையே நடக்கும் பேச்சுத்தொடர்பு, அதாவது ஜெபமும் பைபிள் படிப்பும், கடவுளோடு நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்ள உதவும்.

 “உன்னதமான கடவுளா இருக்கற யெகோவாகிட்ட பேசறது, மனுஷங்களுக்குக் கிடைச்சிருக்கற மிகப் பெரிய பாக்கியம்னுதான் சொல்லணும்.”​—ஜெரமி.

 “அடிமனசில இருக்கற உணர்ச்சிகள யெகோவாகிட்ட கொட்டுறதால அவர்கிட்ட நெருக்கமா இருக்கற மாதிரி உணர்றேன்.”​—மிரான்டா.

 கடவுள் காதுகொடுத்துக் கேட்கிறாரா?

 நீங்கள் கடவுளை நம்பினாலும், அவரிடம் ஜெபம் செய்தாலும் அவர் நிஜமாகவே காதுகொடுத்துக் கேட்கிறாரா என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்துகொண்டே இருக்கலாம். ஆனால், யெகோவாவை பைபிள் ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்று அழைக்கிறது. (சங்கீதம் 65:2) “உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்” என்றும்கூட அது சொல்கிறது. ஏன்? ஏனென்றால், “அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்.”​—1 பேதுரு 5:7.

 சிந்திக்க ஒரு விஷயம்: உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் தவறாமல் பேசுவதற்கு நேரம் செலவிடுகிறீர்கள், இல்லையா? அப்படியென்றால், கடவுளிடம் பேசுவதற்கு நீங்கள் ஏன் நேரம் செலவிடக்கூடாது? தவறாமல் கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள், யெகோவா என்ற பெயரைச் சொல்லி ஜெபம் செய்யுங்கள். (சங்கீதம் 86:5-7; 88:9) “எப்போதும் ஜெபம் செய்யுங்கள்” என்று பைபிளும்கூட உங்களை உற்சாகப்படுத்துகிறது.​—1 தெசலோனிக்கேயர் 5:17.

 “மனசில இருக்கற எல்லாத்தையும் பரலோக அப்பாகிட்ட அப்படியே கொட்டறதத்தான் ஜெபம்னு சொல்வேன்.”​—மோய்செஸ்.

 “அம்மாகிட்டயோ க்ளோஸ் ஃப்ரெண்டுகிட்டயோ, எப்படி சில விஷயங்கள பத்தி ரொம்ப நேரம் பேசுவேனோ அதேமாதிரிதான் யெகோவாகிட்டயும் பேசறேன்.”—கேரன்.

 எதைப் பற்றியெல்லாம் நான் ஜெபம் செய்யலாம்?

 “உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் நன்றியோடுகூடிய ஜெபத்தின் மூலமும் மன்றாட்டின் மூலமும் கடவுளிடம் சொல்லுங்கள்” என்று பைபிள் உற்சாகப்படுத்துகிறது.​—பிலிப்பியர் 4:6.

 அப்படியென்றால், உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி நீங்கள் ஜெபம் செய்யலாமா? தாராளமாகச் செய்யலாம்! “யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு. அவர் உன்னை ஆதரிப்பார்” என்று பைபிளும்கூட சொல்கிறது.​—சங்கீதம் 55:22.

 அதற்காக, உங்கள் ஜெபத்தில் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது. “யெகோவாகிட்ட உதவிய மட்டுமே கேட்டுட்டு இருந்தா, அத நல்ல நட்புன்னு சொல்ல முடியாது. என்னை பொறுத்தவரை, முதல்ல நன்றி சொல்லணும். நான் எதுக்கெல்லாம் நன்றி சொல்ல நெனைக்கிறனோ அந்த லிஸ்ட் பெரிசா இருக்கணும்” என்கிறாள் சேன்ட்டெல் என்ற இளம் பெண்.

 சிந்திக்க ஒரு விஷயம்: எதற்கெல்லாம் நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்? யெகோவாவுக்கு நன்றி சொல்வதற்கான என்ன மூன்று விஷயங்கள் இன்றைக்கு உங்களுக்கு இருக்கிறது?

 “சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட நன்றி சொல்லலாம்; அழகான ஒரு பூவை ரசிச்சுப் பார்க்கறப்பகூட யெகோவாவுக்கு நன்றி சொல்ல நம்ம மனசு நம்மள தூண்டலாம்.”​—அனிட்டா.

 “உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச ஒரு படைப்ப பத்தியோ, உங்க மனச தொட்ட ஒரு பைபிள் வசனத்த பத்தியோ ஆழமா யோசிச்சு பாருங்க, அதுக்காக யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்க.”​—ப்ரையன்.