Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

செக்ஸ் தாக்குதலைப் பற்றி நான் என்ன தெரிந்துவைத்திருக்க வேண்டும்?​—பகுதி 1: முன்னெச்சரிக்கையாக இருப்பது

செக்ஸ் தாக்குதலைப் பற்றி நான் என்ன தெரிந்துவைத்திருக்க வேண்டும்?​—பகுதி 1: முன்னெச்சரிக்கையாக இருப்பது

 செக்ஸ் தாக்குதல் என்றால் என்ன?

 ஒவ்வொரு நாட்டிலும் “செக்ஸ் தாக்குதல்” என்பதற்கு சட்டத் துறையில் கொடுக்கப்படுகிற விளக்கங்கள் வித்தியாசப்படுகின்றன. ஆனால் பொதுவாக இந்த வார்த்தைகள், கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்வதை அர்த்தப்படுத்தலாம். சில சமயங்களில், முரட்டுத்தனமாக அப்படி செய்வதை குறிக்கலாம். சிறுப்பிள்ளைகளை அல்லது டீனேஜ் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வது, இரத்த சொந்தங்களுடன் உடலுறவு கொள்வது, கற்பழிப்பது, சுயநலத்துக்காகப் பிள்ளைகளைப் பாலுறவில் ஈடுபட செய்வது என இவை எல்லாமே செக்ஸ் தாக்குதலில் அடங்கும். உங்களுக்கு நம்பகமாக இருக்க வேண்டியவரே, அதாவது மருத்துவர், ஆசிரியர் அல்லது மதத்தலைவர்கள் போன்றவர்களே இப்படியெல்லாம் செய்யலாம். இப்படி உடல் அளவிலோ, வார்த்தைகளாலோ செக்ஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சிலர், தங்களுக்கு நடந்ததைப் பற்றி யாரிடமும் சொல்லகூடாது என்று மிரட்டப்படுகிறார்கள்.

 ஒரு ஆய்வின்படி, ஐக்கிய மாகாணங்களில் மட்டும் ஒரு வருஷத்தில் இரண்டரை லட்சம் பேர் செக்ஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதில் கிட்டத்தட்ட பாதி பேர் 12-லிருந்து 18 வயதிற்குள் இருப்பவர்கள்.

 எதை நீங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும்?

  •   செக்ஸ் தாக்குதலை பைபிள் கண்டனம் செய்கிறது. சுமார் 4,000 வருஷத்துக்கு முன்பு, சோதோம் நகரத்துக்கு வந்த இரண்டு ஆண்களை கற்பழிக்க செக்ஸ் வெறிபிடித்த ஒரு கும்பல் முயற்சி செய்தது. யெகோவா அந்த நகரத்தை ஏன் அழித்தார் என்று புரிந்துகொள்ள இந்த சம்பவம் உதவி செய்கிறது. (ஆதியாகமம் 19:4-13) மேலும், 3500 வருஷங்களுக்கு முன்பு, மோசேயிடம் கொடுத்த திருச்சட்டத்தில் குடும்ப அங்கத்தினர்கள் உட்பட, இரத்த சொந்தங்களோடு உடலுறவுகொள்ளக் கூடாது என்று யெகோவா சொல்லியிருந்தார்.—லேவியராகமம் 18:6.

  •   பெரும்பாலான தாக்குதல்கள் நமக்கு தெரிந்தவர்களால்தான் ஏற்படுகிறது. டாக்கிங் செக்ஸ் வித் யுவர் கிட்ஸ் (ஆங்கிலம்) என்ற புத்தகம், “கற்பழிக்கப்பட்டவர்களில், மூன்றில் இரண்டு பேருக்கு தங்களைத் தாக்கியது யார் என்பது தெரியும். அவர் எங்கிருந்தோ வந்த ஒருவர் கிடையாது” என்று சொல்கிறது.

  •   இரு பாலினத்தவருக்குமே செக்ஸ் தாக்குதல் நடக்கிறது. அமெரிக்காவில், செக்ஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் ஆண்கள். ரேப், அப்யூஸ் அண்டு இன்செஸ்ட் நேஷனல் நெட்வர்க் (RAINN) என்கிற அமைப்பு இப்படி சொல்கிறது: “பாதிக்கப்பட்ட ஆண்கள், ஓரினச்சேர்க்கையாளர்களாக ஆகிவிடுவோம் என்றோ தங்களுடைய தன்மானத்தை இழந்துவிடுவோம் என்றோ பயப்படலாம்.”

  •   செக்ஸ் தாக்குதலைப் பற்றி ஆச்சரியப்பட வேண்டியதில்லை. “கடைசி நாட்களில்” நிறைய பேர் “பந்தபாசம் இல்லாதவர்களாக” இருப்பார்கள் என்றும், “கொடூரமானவர்களாக” “சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக” இருப்பார்கள் என்றும் பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:1-3) செக்ஸ் தாக்குதலில் ஈடுபடுகிறவர்களிடம் இந்தக் குணங்களைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

  •   செக்ஸ் தாக்குதல், பாதிக்கப்பட்டவரின் தவறு இல்லை. யாருக்குமே செக்ஸ் தாக்குதல் நடக்கக்கூடாது. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தாக்கியவர்தான் இதற்கு முழுக்க முழுக்க காரணம். இருந்தாலும், தாக்குதல் நடப்பதற்கான வாய்ப்புகளைத் தவிர்க்க உங்களால் சில படிகளை எடுக்க முடியும்.

 நீங்கள் என்ன செய்யலாம்?

  •   தயாராக இருங்கள். உங்களோடு டேட்டிங் செய்பவராக இருந்தாலும் சரி, உங்கள் உறவினராக இருந்தாலும் சரி உங்களைக் கட்டாயப்படுத்தி செக்ஸ் வைத்துக்கொள்ள முயற்சி செய்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னதாகவே தெரிந்துவைத்திருங்கள். “கூட இருப்பவர்கள் கொடுக்கும் எந்தவொரு தொல்லையாக இருந்தாலும் சரி, அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அங்கு என்ன நடக்கலாம் என்று நடித்துப் பார்க்கலாம். அதை எப்படி சமாளிக்கலாம் என்று முன்னதாகவே யோசித்துப் பார்க்கலாம்” என்று சொல்கிறார் எரின் என்ற இளம் பெண். “இப்படி செய்வதெல்லாம் இந்த காலத்துக்கு ஒத்துவருமா என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், இப்படி செய்தால் இதுபோன்ற சூழ்நிலை வரும்போது அதில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க நிச்சயம் உங்களுக்கு உதவும்” என்றும் அவர் சொல்கிறார்.

     பைபிள் என்ன சொல்கிறது: “அதனால், நீங்கள் ஞானமில்லாதவர்களாக நடக்காமல், ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு அதிக கவனம் செலுத்துங்கள் . . . ஏனென்றால், நாட்கள் மிகவும் மோசமாக இருக்கின்றன.”​—எபேசியர் 5:15, 16.

     உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: யாராவது ஒருவர் என்னைத் தொடுவது எனக்கு அசௌகரியமாக இருந்தால் நான் என்ன செய்வேன்?

  •   அங்கிருந்து வெளியே வருவதற்கு முன்கூட்டியே திட்டமிடுங்கள். “உங்கள் நண்பர்களிடமோ குடும்பத்தாரிடமோ ஒரு கோட் வர்டை (Code word) சொல்லி வையுங்கள். அப்போது, அங்கு என்ன நடக்கிறது என்பதை, தொல்லைக் கொடுப்பவருக்கு தெரியாமலேயே ஃபோன் செய்து சொல்ல முடியும். அப்போது அவர்கள் அங்கு வந்து உங்களை அழைத்து செல்ல முடியும்; அல்லது, அவர்கள் வந்திருப்பதை காரணம் காட்டி அங்கிருந்து உங்களால் வெளியே வர முடியும்” என்று மேலே சொல்லப்பட்ட RAINN என்கிற அமைப்பு சொல்கிறது. இப்படி செய்தால், நிலைமை எல்லைமீறி போகாத அளவுக்கு ஆரம்ப கட்டத்திலேயே உங்களால் அதை தடுக்க முடியும்.

     பைபிள் என்ன சொல்கிறது: “சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான். ஆனால், அனுபவமில்லாதவன் நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்.”​—நீதிமொழிகள் 22:3.

     உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘அங்கிருந்து வெளியே வர நான் முன்கூட்டியே என்ன திட்டம் போட்டிருக்கிறேன்?’

    அங்கிருந்து வெளியே வருவதற்கு எப்போதுமே ஒரு திட்டம் வைத்திருங்கள்

  •   எல்லைகளை வைத்துக்கொள்ளுங்கள்—அதில் உறுதியாக இருங்கள். உதாரணத்துக்கு, டேட்டிங் செய்யும்போது இருவரும் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதை முன்கூட்டியே கலந்துபேசுங்கள். இப்படி எல்லைகள் வைப்பது எல்லாம் முக்கியம் இல்லை என்று உங்களோடு டேட்டிங் செய்பவர் நினைத்தால் அவரோடு டேட்டிங் செய்வதை நிறுத்திவிடுங்கள். நீங்கள் முக்கியம் என்று நினைக்கும் விஷயத்துக்கு மதிப்பு கொடுக்கும் வேறோருவருடன் நீங்கள் டேட்டிங் செய்யலாம்.

     பைபிள் என்ன சொல்கிறது: “அன்பு . . . கேவலமாக நடந்துகொள்ளாது, சுயநலமாக நடந்துகொள்ளாது.”​—1 கொரிந்தியர் 13:4, 5.

     உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் எதை முக்கியமானதாக நினைக்கிறேன்? எப்படிப்பட்ட நடத்தை தவறானது என்று நான் நினைக்கிறேன்?’