Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | இளைஞர்களுக்காக...

அப்பாவையோ அம்மாவையோ இழக்கும்போது

அப்பாவையோ அம்மாவையோ இழக்கும்போது

சவால்

டேமிக்கு 6 வயது இருக்கும்போது அவளுடைய அப்பா பிரையின் அன்யுரிஸம் என்ற வியாதியால் இறந்துபோனார். டெரிக்குக்கு 9 வயது இருக்கும்போது அவருடைய அப்பா இதய நோயால் இறந்துவிட்டார். ஜினிவுடைய அம்மா ஒரு வருஷமாக கருப்பை புற்றுநோயால் அவதிப்பட்டு இறந்துபோனார். அப்போது ஜினிக்கு 7 வயது. *

சின்ன வயதிலேயே இவர்கள் மூன்று பேரும் அவர்களுக்கு நெருக்கமானவர்களை பறிகொடுத்திருக்கிறார்கள். உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கிறதா? அப்படியென்றால் நிச்சயம் இந்தக் கட்டுரை உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். * முதலில், துக்கத்தில் தவிப்பவர்களைப் பற்றிய சில உண்மைகளைப் பார்க்கலாம்.

சில உண்மைகள்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் துக்கத்தை வெளிப்படுத்துவார்கள். ஹெல்ப்பிங் டீன்ஸ் கோப் வித் டெத் என்ற புத்தகம் இப்படிச் சொல்கிறது: “பாசத்துக்குறியவர்களை மரணத்தில் பறிகொடுத்தவர்கள் தங்களுடைய துக்கத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கு எந்தவொரு குறிப்பிட்ட சட்டமும் இல்லை.” எல்லாரும் ஒரே விதத்தில் துக்கத்தை வெளிப்படுத்துவார்கள் என்று சொல்ல முடியாது. அதேசமயத்தில், துக்கத்தை மனதில் அடக்கி வைப்பதும் சரியில்லை. ஏன் அப்படிச் சொல்கிறோம்?

துக்கத்தை அடக்கி வைப்பது ஆபத்தானது. நாம் ஆரம்பத்தில் பார்த்த ஜினி சொல்வதைக் கவனியுங்கள். “என் தங்கச்சிக்காக நான் தைரியமா இருக்கணும்னு நினைச்சேன். வேதனைய மனசுலயே அடக்கி வைச்சேன். இப்பக்கூட சில சமயம் அப்படித்தான் செய்வேன். ஆனா, அப்படி செய்றது சரியில்லனு எனக்கு தெரியும்.”

இதை நிபுணர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். “உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது. அதை ரொம்ப நாள் அடக்கி வைக்கவும் முடியாது. ஏனென்றால், நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அது கண்டிப்பாக வெடிக்கும். அல்லது உடலில் ஏதாவது பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று தி கிரீவிங் டீன் புத்தகம் சொல்கிறது. ஒருவேளை துக்கத்தை அடக்குவதால் நீங்கள் போதை பொருளுக்கு அல்லது குடிப்பழக்கத்துக்கு அடிமையாகலாம். இப்படிச் செய்வதால் வலியை மறக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்.

துக்கத்தில் இருக்கும் சிலர் ரொம்ப குழம்பிப்போயிருப்பார்கள். உதாரணத்துக்கு, யாரை மரணத்தில் இழந்தார்களோ அவர்கள் மீதே கோபப்படுவார்கள். அந்த நபர் தன்னை அம்போவென விட்டுவிட்டு சென்றதுபோல் உணருவார்கள். சிலர் கடவுள் நினைத்திருந்தால் இதைத் தடுத்திருக்க முடியும் என்று கடவுளைக் குறை சொல்வார்கள். இன்னும் சிலர், இறந்துபோன நபரிடம் கடைசியாக சொன்னதையோ அல்லது அவருக்கு செய்ததையோ நினைத்து குற்றவுணர்வால் கஷ்டப்படுவார்கள். ஏனென்றால் நினைத்தால்கூட இப்போது அவர்களால் எதுவுமே செய்ய முடியாது.

துக்கத்தில் இருந்து மீண்டு வருவது கஷ்டமான விஷயம்தான். இருந்தாலும் உங்களால் அதிலிருந்து மீண்டு வர முடியும்.

நீங்கள் என்ன செய்யலாம்

யாரிடமாவது மனம்விட்டு பேசுங்கள். சோகமாக இருக்கும்போது தனியாக இருக்க நினைப்பது இயல்புதான். ஆனால், உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களிடம் அல்லது நண்பர்களிடம் உங்கள் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டிவிட்டீர்கள் என்றால் உங்கள் மன பாரம் ஓரளவு குறையும். துக்கத்திலேயே மூழ்கிவிட மாட்டீர்கள்.—பைபிள் அறிவுரை: நீதிமொழிகள் 18:24.

உங்கள் உணர்வுகளை எழுதி வையுங்கள். நீங்கள் பறிகொடுத்த உங்கள் அப்பாவை அல்லது அம்மாவைப் பற்றி எழுதுங்கள். உதாரணத்துக்கு, அவரை பற்றிய பசுமையான நினைவுகளையும் அவரிடம் இருந்த நல்ல குணங்களையும் எழுதி வையுங்கள். எந்தெந்த குணங்களை உங்கள் வாழ்க்கையில் காட்ட விரும்புகிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

உங்கள் மனதை வாட்டி வதைக்கும் உணர்வுகள் ஏதாவது இருக்கிறதா? உதாரணத்துக்கு, உங்கள் அப்பாவோ அம்மாவோ இறப்பதற்கு முன்பாக நீங்கள் சொன்ன கடுமையான வார்த்தைகள் உங்களுக்கு வேதனையை தரலாம். அதைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்... ஏன் அப்படி உணருகிறீர்கள்... என்று எழுதுங்கள். நீங்கள் ஒருவேளை இப்படி எழுதலாம்: “எங்க அப்பா சாகுறதுக்கு முந்தின நாள் நான் அவர்கிட்ட பயங்கரமா சண்டை போட்டேன். அதை நினைச்சா என் மனசாட்சி இப்பவும் குத்துது.”

அடுத்தது, உங்கள் மனசாட்சி சொல்வது நியாயமா என்று யோசியுங்கள். தி கிரீவிங் டீன் என்ற புத்தகம் இப்படிச் சொல்கிறது: “மன்னிப்பு கேட்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்பது உங்களுக்கு தெரியாது. அப்படியிருக்கும்போது, உங்களையே நீங்கள் குற்றப்படுத்திக்கொள்வது நியாயமாக இருக்காது.” “மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே வராத விதத்தில் ஒரு நபரால் எப்போதுமே நடந்துகொள்ள முடியாது.”—பைபிள் அறிவுரை: யோபு 10:1.

உங்கள் உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள். நன்றாக ஓய்வெடுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள். நல்ல சத்தான உணவைச் சாப்பிடுங்கள். உங்களுக்கு ஒருவேளை சாப்பிட பிடிக்கவில்லை என்றால் பசியெடுக்கும்வரை சத்தான எளிய உணவை அடிக்கடி சாப்பிடுங்கள். கவலையை மறப்பதற்காக அதிகமாக குடிப்பதை... நொறுக்குத்தீனி சாப்பிடுவதை... பழக்கமாக்கிக்கொள்ளாதீர்கள். அப்படிச் செய்தால் உங்கள் நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும்.

கடவுளிடம் பேசுங்கள். “யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு. அவர் உன்னை ஆதரிப்பார்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 55:22) கடவுளிடம் வேண்டிக்கொண்டால் ஏதோ அந்தச் சமயத்திற்கு மன நிம்மதி கிடைக்கும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், கடவுளிடம் வேண்டிக்கொள்வது என்பது அவரிடம் உண்மையிலேயே பேசுவதைக் குறிக்கிறது. அப்படிச் செய்தால், “நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும் அவர் நமக்கு ஆறுதல்” தருவார்.—2 கொரிந்தியர் 1:3, 4.

துக்கத்தில் தவிப்பவர்களுக்கு கடவுள் அவருடைய வார்த்தையாகிய பைபிள் மூலமாக ஆறுதல் தருகிறார். இறந்தவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் அவர்களுக்கு இருக்கும் உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றியும் பைபிளில் இருந்து தெரிந்துகொள்ளுங்கள். *—பைபிள் அறிவுரை: சங்கீதம் 94:19.

^ பாரா. 4 டேமி, டெரிக் மற்றும் ஜினியின் அனுபவத்தை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

^ பாரா. 5 அப்பாவையோ அம்மாவையோ இழந்தவர்களுக்காக இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் கூடப்பிறந்தவர்களையும் நண்பர்களையும் பறிகொடுத்தவர்களுக்குக்கூட இந்தக் கட்டுரை ஆறுதலாக இருக்கும்.

^ பாரா. 19 இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள், பகுதி-1-ல் (ஆங்கிலம்) அதிகாரம் 16-ஐ பாருங்கள். www.ps8318.com-ல் இருந்து இதை இலவசமாக டவுன்லோட் செய்யலாம். வெளியீடுகள் என்ற தலைப்பில் பாருங்கள்.